வசூலில் விடுதலை 2-வை துவம்சம் செய்த முஃபாசா…
சூரியை கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதியை கதாநாயகனாகவும் வைத்து வெற்றிமாறன் இயக்கிய படம் விடுதலை. இதன் முதல் பாகம் கடந்தாண்டு ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 20ந் தேதி திரைக்கு வந்தது.
இப்படத்துக்கு போட்டியாக முஃபாசா தி லயன் கிங் என்கிற ஹாலிவுட் படமும் ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.
ஏனெனில் முஃபாசா படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களுக்கு அர்ஜுன் தாஸ், நாசர், ரோபோ சங்கர், சிங்கம் புலி, அசோக் செல்வன் என முன்னணி நட்சத்திரங்கள் பலர் குரல் கொடுத்திருந்தனர்.
தி லயன் கிங் படத்தின் தமிழ் டப்பிங்கிற்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்ததோ, அதே அளவு வரவேற்பு முஃபாசா படத்திற்கும் கிடைத்து வருகிறது. இதனால் இப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு வருவதோடு வசூலையும் வாரிக்குவித்துள்ளது.
அந்த வகையில் முஃபாசா திரைப்படம் 6 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.18.49 கோடி வசூலித்துள்ளது. இதில் கிறிஸ்துமஸ் விடுமுறை தினமான நேற்று மட்டும் இப்படம் ரூ.4.23 கோடி வசூலித்து உள்ளது. இப்படம் ரிலீஸான நாளில் இருந்து நேற்று தான் அதிக வசூலை அள்ளி இருக்கிறது. இதற்கு முன்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ரூ.4.16 கோடி வசூலித்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரூ.4.23 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் பிக் அப் ஆகி உள்ளது.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் விடுதலை 2 படத்தையே நேற்று வசூலில் ஓவர்டேக் செய்திருக்கிறது முஃபாசா.
விடுதலை 2 திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று ரூ.2.93 கோடி மட்டுமே வசூலித்திருந்தது. ஆனால் முஃபாசா அதைவிட 1.3 கோடி அதிகம் வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது. விடுதலை 2 படம் இதுவரை ரூ.25.61 கோடி வசூலித்திருக்கிறது. இப்படம் நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருவதால் 50 கோடி வசூலிப்பதே கேள்விக்குறியாகி உள்ளது.