பட்ஜெட்டை விட 225 மடங்கு அதிக லாபம் பார்த்த படம் எது தெரியுமா?
தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. அப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததோடு, தேசிய விருதையும் வென்றது.
தென்மேற்கு பருவக்காற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து பீட்சா படத்தில் நடித்தார் விஜய் சேதுபதி.
இந்த இரண்டு படங்களும் ஹிட்டான பின்னர் அவர் மூன்றாவதாக நடித்த திரைப்படம் தான் விஜய் சேதுபதிக்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்ததோடு பட்ஜெட்டை விட 225 மடங்கு அதிக லாபமும் ஈட்டி கொடுத்திருக்கிறது.
அந்த படம் தான் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். இப்படத்தை பாலாஜி தரணீதரன் இயக்கி இருந்தார். இப்படம் கடந்த 2012-ம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்திருந்தார்.
இப்படத்தை வெறும் 79.25 லட்சம் பட்ஜெட்டில் எடுத்துள்ளனர். அதில் விஜய் சேதுபதி சம்பளம் மட்டும் ரூ.25 லட்சமாம். இதுதவிர தயாரிப்பு செலவு ரூ.32 லட்சம், நடிகை காயத்ரி சம்பளம் 5 லட்சம், இதர நடிகர், நடிகைகள் சம்பளம் 8.65 லட்சம், பிரிண்ட் பப்ளிசிட்டி என அதற்கு 8.50 லட்சம் என மொத்தமே 79.25 லட்சம் தான் செலவாகி இருக்கிறது.
இப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமை மட்டும் 1.80 கோடிக்கு விற்பனை ஆனது. இதுதவிர அப்படத்தின் சாட்டிலைட் உரிமை ரூ.55 லட்சத்துக்கு விற்பனை ஆனது.
ப்ரீ ரிலீஸிலேயே 2.35 கோடி வசூலித்த இப்படம் அதிலேயே 1.5 கோடி தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டி கொடுத்தது.
இதையடுத்து தியேட்டரில் ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்ட இப்படம், பாக்ஸ் ஆபிஸில் ரூ.13.79 கோடி வசூலித்தது. இதில் விநியோகஸ்தருக்கு கிடைத்த ஷேர் தொகை மட்டும் 8.27 கோடியாம். படத்தை வெறும் 1.80 கோடிக்கு வாங்கி 6.47 கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருக்கிறார் விநியோகஸ்தர்.
பின்னர் இறுதியாக படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் இயக்குனர் பாலாஜிக்கும், ஒளிப்பதிவாளர் பிரேம் குமாருக்கும் தலா 50 லட்சம் ஷேர் வழங்கப்பட்டது.
அதேபோல் படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளுக்கு மொத்தமாக 55 லட்சமும், அப்படத்தின் நாயகன் விஜய் சேதுபதிக்கு 28.50 லட்சம் மதிப்புள்ள பார்ச்சூனர் காரும், நாயகி காயத்ரிக்கு 8.75 லட்சம் மதிப்புள்ள மாருதி காரும் பரிசாக வழங்கப்பட்டது போக, 4.34 கோடி லாபம் கிடைத்துள்ளது. இது படத்தின் பட்ஜெட்டை விட 225 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மூலம் தான் நடிகர் விஜய் சேதுபதியின் மார்க்கெட்டும் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.