மகனின் உயிரை காப்பாற்றிய வைத்தியருக்கு நெப்போலியன் என்ன செய்தார் தெரியுமா?
நடிகர் நெப்போலியன் தனது மகன் பாதிக்கப்பட்ட அரியவகை நோய்க்கு சிகிச்சை அளித்த நாட்டு வைத்தியருக்கு 10 கோடியில் மருத்துவமனை கட்டிக் கொடுத்திருக்கிறார்.
நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷ், தசைச் சிதைவு என்கிற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இது அவருக்கு 4 வயது இருக்கும்போதே கண்டுபிடிக்கப்பட்டாலும், 10 வயதில் தனுஷால் நடக்கமுடியாமல் போகும் என்றும், 17 வயது வரை தான் அவர் உயிர் வாழ்வார் என்றும் கூறிவிட்டார்களாம் மருத்துவர்கள்.
இப்படி மருத்துவர்களே கைவிரித்ததாலும், எப்படியாவது காப்பாற்றிவிடலாம் என்கிற நம்பிக்கையில் இருந்து வந்துள்ளார் நெப்போலியன்.
ஆனால் மருத்துவர் சொன்னபடியே 10 வயதில் தனுஷால் நடக்க முடியாமல் போய் உள்ளது. இதனால் நெப்போலியனுக்கும் அவரது மனைவிக்கும் பயம் அதிகரித்துள்ளது. பின்னர் இந்த அரியவகை நோய்க்கு சிகிச்சை எடுக்க உலகம் முழுவதும் தேடி இருக்கிறார்கள்.
இறுதியாக திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வீரவநல்லூர் என்கிற கிராமத்தில் பரம்பரையாக நாட்டு வைத்தியம் செய்து வரும் ஒருவரிடம் சென்றும் மகனுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார் நெப்போலியன்.
அதற்காக அந்த ஊரிலேயே வீடு எடுத்து தங்கி சிகிச்சை எடுத்து வந்துள்ளார். மருத்துவர்கள் நடக்கவே மாட்டான் என சொன்ன தனுஷை நாட்டு வைத்தியம் மூலம் படிப்படியாக நடக்க வைத்திருக்கின்றனர்.
அந்த சமயத்தில் நெப்போலியன் மத்திய அமைச்சராகவும் இருந்ததால், அவரது மகனுக்கு அளிக்கப்பட்ட இந்த சிகிச்சை பற்றி பத்திரிகைகளில் செய்தி வெளியாகி அது இந்தியா முழுவதும் வைரலாக பரவி இருக்கிறது.
இதையடுத்து தன் மகன் போலவே தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியா முழுவதிலும் இருந்து அந்த நாட்டு வைத்தியரிடம் வந்துள்ளனர். ஆனால் அவருக்கு அத்தனை பேருக்கு சிகிச்சை அளிக்கும் வசதி இல்லாததை அறிந்த நெப்போலியன், தன் மகனை காப்பாற்றிய அந்த வைத்தியருக்காக ரூ.10 கோடி செலவில் பிரம்மாண்ட மருத்துவமனை ஒன்றை கட்டித் தந்துள்ளார்.
மயோபதி என்கிற அந்த மருத்துவமனையை தற்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின் தான் திறந்து வைத்தாராம்.
தற்போது உலகம் முழுவதிலும் இருந்து வந்து அங்கு சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்களாம். அங்கு தங்குமிடம் மற்றும் உணவுக்கு மட்டும் தான் காசு வசூலிக்கப்படுகிறதாம். மற்றபடி சிகிச்சை அனைத்தும் முற்றிலும் இலவசமாக செய்து வருகிறார்களாம்.
தற்போது அங்கு சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இன்னும் 100 அறைகள் கொண்ட பில்டிங்கை கட்ட முடிவு செய்துள்ளார்களாம். இதற்காக நெப்போலியனும் அவருடன் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்த நண்பர்களும் சேர்ந்து நிதியுதவி அளித்துள்ளார்களாம்.
தற்போது மகனுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட நெப்போலியன், அங்கு தனது மகனுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறதோ, அதே தரத்தில் திருநெல்வேலியில் உள்ள தன்னுடைய மயோபதி மருத்துவமனையிலும் அளிக்கப்படுவதாக நெகிழ்ச்சி உடன் கூறி இருக்கிறார். மகனுக்காக மருத்துவமனையே கட்டித்தந்துள்ள நெப்போலியனை அனைவரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.