மோடி தெய்வ மகன் கிடையாது இல்லை… அவர் ஒரு டெஸ்ட் டியூப் பேபி…

மோடி தெய்வ மகன் கிடையாது இல்லை… அவர் ஒரு டெஸ்ட் டியூப் பேபி…
  • PublishedMay 26, 2024

எம்.பி. திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது. அந்த விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது.

விருது வாங்கிய பின்பு பேசிய அவர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

விருது விழாவில் பேசிய அவர், “உடம்புக்கு காயமானால் நாங்கள் சும்மா இருந்தாலும் அது ஆறிடும். ஆனால், ஒரு நாட்டுக்கு காயமானால் நாம் பேசாமல் இருந்தால் அது அதிகமாகிவிடும். இன்றைக்கு இந்த மேடையில் நான் நிற்கிறேன் என்றால் அதற்கு மக்கள்தான் காரணம். அந்த மக்களுக்கு ஒரு பிரச்சனை என்கிறபோது, ஒரு கலைஞன் கோழையாகிவிட்டால், சமுதாயமே கோழையாகிவிடும். என்றும் மக்களின் குரலாக இருப்பேன்.

கடந்த 10 வருடங்களாக இந்த மன்னரை நான் எதிர்த்து கொண்டு இருக்கிறேன். இனி மோடியை மன்னர் என்று சொல்லமுடியாது. அவர் தெய்வக்குழந்தை ஆகிவிட்டார்.

இனிமேல் நாம் அவரை தேர்ந்தெடுக்கமுடியாது. அவரால் நாட்டுக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால் நம்மால் அவரை திட்ட முடியாது. தெய்வம் சோதிக்கிறது என்றுதான் சொல்லமுடியும்.

மறைந்த கவுரி லங்கேஷ் உடைய தந்தை லங்கேஷ் தான் என்னுடைய ஆசான். அவர்தான் எங்களை செதுக்கியவர். அம்பேத்கர் அரசியலமைப்பை எழுதாமல் இருந்திருந்தால் இந்த நாடு எப்படி இருக்கும் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது. அவருடைய சிந்தனைகள் பசியால், வறுமையால் பிறந்ததல்ல. அவமானத்தில் பிறந்தது.

மோடியை கொஞ்சம் பாருங்களேன்.. ஒரு ஃபாசிஸ்ட். ஒரு சர்வாதிகாரி. அவர் தேரில் தான் நிற்பார். விமானத்தில் தான் வருவார்; மக்கள் பூ போடுவார்கள். அவர் மக்கள் பக்கத்தில் நிற்க மாட்டார். மக்கள் வேலிக்கு அந்த பக்கம் நிற்பார்கள். மக்களின் ஸ்பரிசம் தெரியாதவன், மக்களின் வியர்வையை தொடாதவன், மக்களின் பசியை அறியாதவனுக்கு மக்களை பற்றி எப்படி புரியும். அவர் தெய்வ மகன் கிடையாது. டெஸ்ட் டியூப் பேபி.

அவரை தேர்தலில் வெற்றி பெறுவது மட்டும் வெற்றி அல்ல. இந்த 10 வருட காலமாக அவர் பல இடங்களில் தனது விதையை விதைத்திருக்கிறான் அல்லவா. நான் ஆர்எஸ்எஸ் காரன் என்பதில் பெருமை அடைகிறேன் என்று ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி ஓய்வுபெறும் போது சொல்கிறார்.. அப்படியென்றால், அந்த நபர் நீதிபதியாக இருக்கும் போது எத்தகைய தீர்ப்புகளை கொடுத்திருப்பார் என்று நமக்கு தெரியாதா.

இது ஒரு நிரந்தரமான போராட்டம். ஹிட்லர் மாதிரி ஆட்களில் இருந்து வந்தவர் தான் இவரும். ஆனால் இந்த மாதிரி ஆட்கள் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. ஏனென்றால், இதுபோன்ற ஆட்களை இயற்கையே ஜீரணிக்காது. வெளியே துப்பி விடும். மீண்டும் மீண்டும் இவர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால் போகும் போது கிடைக்கும் பாடங்கள் இருக்கிறது அல்லவா. அதுதான் அதுபோன்ற ஆட்கள் மீண்டும் வருவதற்கு நீண்டகாலத்தை உருவாக்கும். ஆனால் அவர்களை நாம் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று பிரகாஷ் ராஜ் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *