விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பிரசாந்த் என்ன சொன்னார் தெரியுமா?
1992 ல் விஜய் நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமாகும் போது பிரசாந்த் முன்னணி இளம் ஹீரோ. 1990 ல் அவர் அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு பம்பர்ஹிட். அடுத்து, பாலுமகேந்திராவின் வண்ண வண்ணப் பூக்கள் 100 நாள் படம். அதையடுத்து செல்வமணியின் பம்பர்ஹிட் செம்பருத்தி. அதற்கு அடுத்த வருடம் மணிரத்னத்தின் திருடா திருடா.
விஜய் முதல் வெற்றியை ருசி பார்ப்பதற்குள் பாலுமகேந்திரா முதல் ஷங்கர்வரை ஒரு சுற்று போய் வந்தார் பிரசாந்த். ஆனால், காலம் ஜெயின்ட்வீலைப் போன்றது. இப்போது விஜய் மேலே அமர்ந்திருக்கிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தில், பிரசாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பிரசாந்திடம், அவர் விஜய்யுடன் நடிக்கும் G.O.A.T. படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்தவர்,
“விஜய்யுடன் நடிக்கும் படம் சூப்பரா போயிட்டு இருக்கு. உங்க எதிர்பார்ப்புக்கு மேல் அந்த படம் இருக்கும்” என்றார். மேலும், அவர் நாயகனாக நடித்துள்ள அந்தகன் (இந்தி அந்தாதுன் படத்தின் தமிழ் தழுவல்) படம் முடிவடைந்துவிட்டதாகவும், விரைவில் திரைக்கு வரும் எனவும் தெரிவித்தார். “இன்னும் சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது, அவற்றில் நடிக்க இருக்கிறேன்” என்றார்.
விஜய் புதிதாக அரசியல் கட்சி தொடங்கியது பற்றிய கேள்விக்கு பதிலளித்தவர், “மக்களுக்கு சேவை செய்யும் பணி உண்மையிலே உழைப்பும், கடமைகளும் நிறைந்தது. அது விஜய் சார்கிட்ட இருக்கு. அதை நான் வாழ்த்துகிறேன். எனக்கு அது ரொம்ப கஷ்டம். அதுக்கு நிறைய தைரியம் வேண்டும். அவர் இறங்கியிருக்கிறார், வாழ்த்துகள்!” என்றார்.