விஜயகாந்தின் நினைவிடத்தில் திடீரென தியானத்தில் அமர்ந்தார் பிரேமலதா
விருதுநகர் மக்களவைத் தொகுதியில், தேமுதிக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே இழுபறி நிலவி வரும் நிலையில் மகனின் வெற்றிக்காக பிரேமலதா விஜயகாந்த் கேப்டன் நினைவிடத்தில் தியானத்தில் அமர்ந்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1-ஆம் தேதி வரை… 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கிய நிலையில், வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம், பின்னடைவை சந்தித்து வரும் அரசியல்வாதிகள் யார் யார், என்பது பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
இந்த முறை நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், மறைந்த நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக களம் கண்டுள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாணிக்கம் தாகூர் மற்றும் பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகின்றனர்.
தபால் வாக்குகள் எண்ணிக்கையின் போது மாணிக்கம் தாகூர் முன்னிலை வசித்த நிலையில், அதன் பின்னர் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணிய போது விஜய பிரபாகரன் முன்னிலை இடத்தை பிடித்தார். மாணித்தாகூர் மீண்டும் முன்னிலை வகிக்கும் நிலையில், இருவருக்கும் இடையே விருதுநகர் தொகுதியில் சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது.
இந்நிலையில் தன்னுடைய மகனின் வெற்றிக்காக கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் தியானத்தில் அமர்ந்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.