‘பாகுபலி 2’ வசூலை முறியடித்த ‘புஷ்பா 2’ – அடுத்தது அந்த படம் தான்
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘புஷ்பா 2’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் மாஸ் காட்டி வருகிறது.
அதன்படி தெலுங்கின் அதிகபட்ச வசூல் சாதனையாக கருதப்படும் ‘பாகுபலி 2’ படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் முறியடித்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புஷ்பா 1 வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகும் என படத்தின் இயக்குநர் சுகுமார் அறிவித்தார்.
அதன்படி ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும், வழக்கம்போல, ஆந்திரா, தெலங்கானா மற்றும் வட மாநிலங்களில் வசூலை வாரி குவித்தது.
தமிழகத்தில் படம் ரூ.70 கோடி வசூலை நெருங்கியதாக கூறப்படுகிறது. அதேபோல படம் வெளியாகி 27 நாட்களை கடந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் ரூ.1800 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய சினிமாவில் அதிக பட்ச வசூலாக ஆமீர்கான் நடித்த ‘தங்கல்’ படம் ரூ.2000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இரண்டாவது இடத்தில் ராஜமௌலி இயக்கிய ‘பாகுபலி 2’ ரூ.1,790 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியானது. தற்போது ‘புஷ்பா 2’ திரைப்படம் ‘பாகுபலி 2’ வசூலை முறியடித்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.