பாட்ஷா பாதி… ராமாயணம் பாதி… கலந்து செய்த கலவை “ராயன்”
ராவணனை ஹீரோவாக தனுஷ் காட்டியிருக்கும் படம் தான் ராயன். கூட இருக்கும் தம்பிகளே துரோகிகளாக மாறுவதும், சூர்ப்பனகையான தங்கையை காளியாக காட்டுவது என ராவணனின் ராஜ்ஜியத்தை நிறுவ முயற்சித்துள்ளார்.
அந்த கதையின் மையக்கரு பிடித்துப் போய் தான் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவே சம்மதித்து இருப்பார் என தெரிகிறது. ராயன் படத்தை ரசிகர்கள் இன்று கொண்டாட காரணமும் இசைப்புயலின் மேஜிக் தான்.
ஆனால், இந்த மந்திரத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த ஆண்டு இயக்கிய லால் சலாம் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் ஏன் பண்ணவில்லை என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தில் இருந்து கொஞ்சம் உருவி, ராமாயணக் கதையில் இருந்து கொஞ்சம் தழுவி தனுஷ் எழுதி இயக்கியுள்ள படம் தான் இந்த ராயன் எனக் கூறுகின்றனர். தனுஷ் நடிக்கவில்லை என்றால் ரஜினிகாந்த் தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியது தான் காமெடியின் உச்சம் என்கின்றனர்.
இந்த படத்தின் உண்மையான ஹீரோ தனுஷ் கிடையாது என்றும் ஏ.ஆர். ரஹ்மான் தான் என பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் அதிரடியாக தெரிவித்துள்ளனர். அந்தளவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலமாக இந்த படத்துக்கு உயிர் கொடுத்து காப்பாற்றியதால் தான் படம் வசூல் ரீதியாக முதல் நாளிலேயே 12.5 கோடி பெற்றதாக கூறுகின்றனர்.
இந்த ஆண்டு ரஜினிகாந்த் மொய்தீன் பாயாக நடித்த லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்தார். அந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் போட்ட ஒரு பாடல் கூட ரசிகர்களை கவரவில்லை என்றும் ராயன் படத்திற்கு போட்டதை போல நல்ல பாடல்களையும் பின்னணி இசையையும் ஏ.ஆர். ரஹ்மான் போட்டுத் தந்திருந்தால் அந்த படமும் வெற்றிப் படமாக மாறியிருக்கும் என ரஜினிகாந்த் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.