ஒட்டுமொத்த திரையுலகினரையும் கலங்க வைத்த அமரன்…

ஒட்டுமொத்த திரையுலகினரையும் கலங்க வைத்த அமரன்…
  • PublishedNovember 5, 2024

சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் அமரன். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். இதில் ஹீரோயினாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படம் மறைந்த இராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தான் இப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது.

அமரன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக அமரன் படத்தை முதல் நாளே பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அப்படத்தை பற்றி சிலாகித்து பேசியதோடு, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை நேரில் அழைத்து தன் பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.

இதுதவிர நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்தை பார்த்ததும் சிவகார்த்திகேயனை கட்டிப்பிடித்து பாராட்டினார். அதேபோல் நடிகர் சூர்யா, தன் மனைவி ஜோதிகா மற்றும் தந்தை சிவக்குமார் உடன் அமரன் படத்தை பார்த்து படக்குழுவுக்கு தன் பாராட்டுக்களை தெரிவித்து உள்ளார்.

இந்த வரிசையில் நடிகர் சிம்புவும் அமரன் படத்தை பார்த்து முடித்த கையோடு படக்குழுவுக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், இதுகுறித்து அவர் போட்டுள்ள எக்ஸ் பதிவில், அமரன் படத்தை முழு மனதாக என்ஜாய் பண்ணினேன். ராஜ்குமார் மற்றும் குழுவினரின் அருமையான படம். சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் அசாதாராணமான நடிப்பு அழமானதாகவும் அன்பு நிறைந்ததாகவும் உள்ளது. அதிக புரொடக்‌ஷன் வேல்யூ கொண்ட படமாக எடுத்துள்ள தயாரிப்பாளர் கமல் சாருக்கு வாழ்த்துக்கள்.

ஜிவி பிரகாஷின் இசை ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்றி இருக்கிறது. எடிட்டர் கலைவாணன், பிரம்மிக்க வைக்கும் காட்சிகளை படமாக்கிய ஒளிப்பதிவாளர் சாய் மற்றும் திரில்லிங் சண்டைக்காட்சிகளை கொடுத்த அன்பறிவு ஆகியோருக்கும் பாராட்டுக்கள். ரியல் ஸ்டோரியை அருமையாக காட்சிப்படுத்தியுள்ள ராஜ்குமாருக்கே அனைத்து பாராட்டுக்களும் சேரும். அவரின் கடின உழைப்பு தான் இப்படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

இதேபோல் அமரன் படம் பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவனும் படக்குழுவுக்கு தன் பாராட்டுக்களை தெரிவித்ததோடு, படத்தில் தன்னை பாதித்த ஒரு சீன் பற்றி ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘அமரன் படத்தில் என்னை மிகவும் காயப்படுத்திய காட்சி என்னவென்றால், முகுந்த் தன் தந்தையிடம் சென்னைக்கு வெளியே சொத்து வாங்குவது குறித்து பேசுவது தான், அவர்களிடம் உள்ள தொகையை வைத்து வண்டலூர் ரூபி பில்டர்ஸில் வாங்க முடிவு செய்கிறார்கள். நாட்டுக்காக தன் உயிரையே தியாகம் செய்த ஒரு கேப்டனுக்கே இந்த நிலை என்றால் அதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். இராணுவ வீரர்களின் சம்பளத்தை 100 மடங்காக அதிகரிக்க வழிவகை செய்தால் அருமையாக இருக்கும். அதற்கு நான் என்னால் முடிந்த பங்களிப்பை அளிக்கவும் தயாராக இருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *