“அடுத்து நம்ம லோகேஷ் படம் தான்” ரஜினி சொன்ன தலைவர் 171 அப்டேட்
சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது வேட்டையன் படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார். முன்னதாக அவர் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் நேற்று வெளியானது.
ஜெயிலரை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. தனது மகள் ஐஸ்வர்யாவுக்காக லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
இந்தப் படம் நேற்று வெளியான நிலையில் வேட்டையன் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்த ரஜினி இன்று சென்னை திரும்பினார். அப்போது அவர் விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ரஜினி, லால் சலாம் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறினார். மேலும், லால் சலாம் படத்தை இயக்கிய தனது மகள் ஐஸ்வர்யா, தயாரித்த லைகா நிறுவனம் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ரஜினியிடம் வேட்டையன் படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினி, வேட்டையன் 80% முடிந்துவிட்டதாகக் கூறினார்.
மேலும், வேட்டையன் ரிலீஸ் தேதி பற்றிய கேள்விக்கு, அது இன்னும் முடிவாகவில்லை என்றார். அதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட பிளான் குறித்தும் ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு “அடுத்து நம்ம லோகேஷ் கனகராஜ் படம் தான்… சீக்கிரமே தலைவர் 171 ஷூட்டிங் தொடங்கும்” எனக் கூறினார். மேலும் இது ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் எனவும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.