ரங்கராஜ் தாக்கல் செய்த மனு திகதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு

ரங்கராஜ் தாக்கல் செய்த மனு திகதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு
  • PublishedNovember 10, 2025

மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, காவல் துறையில் புகார் அளித்ததுடன், சமூக வலைதளங்களில் பேட்டியும் அளித்திருந்தார்.

இந்த நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டா-வுக்கு தடை விதிக்கக் கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாய் கிரிசில்டா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி, தனது மனைவியை விவகாரத்து செய்து விட்டு, திருமணம் செய்து உடன் வாழ்வதாக கூறி ரங்கராஜ் கிரிசில்டாவை ஏமாற்றி விட்டதாக தெரிவித்தார்.

மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தைக்கு டி. என்.ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். டி. என்.ஏ பரிசோதனையில் தந்தை என்று தெரிய வந்தால் குழந்தை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க மாதம்பட்டி ரங்கராஜ் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால், நற்பெயரை பாதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் மோசமான வீடியோக்களை பரப்பி, யூடியூப் சேனல்கள் பணமாக்கி வருகின்றன. அத்தகைய
யூடியூப் சேனல்கள் தங்களை பற்றி அவதூறான வீடியோக்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என, மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உலை வாயை அடைக்கலாம், ஊர் வாயை அடைக்க முடியாது என்று கூறி, வழக்கில் எழுத்துபூர்வமான வாதங்களை வரும் 14 ம் திகதி தாக்கல் செய்ய இருதரப்புக்கும் உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *