சர்ச்சையை ஏற்படுத்திய லட்டு… முட்டி மோதிக்கொள்ளும் நடிகர்கள்
திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் பவன் கல்யாணை குறிப்பிட்டு நடிகர் பிரகாஷ்ராஜ் ட்வீட் செய்திருந்தார். இது சர்ச்சை ஆனதை அடுத்து பிரகாஷ் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
திருப்பதி லட்டு விவகாரம் ஆந்திர அரசியலிலும் மிகப்பெரிய பூகம்பத்தை கிளப்பி உள்ளது. ஆந்திராவின் தற்போதைய முதல்வர், சந்திரபாபு நாயுடு இந்த விஷயத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இதுகுறித்து பேசிய துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண், இனி நாடு முழுவதும் உள்ள கோவில்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க அதற்காக தனியே கமிட்டி ஒன்று அமைக்க வேண்டும். அதாவது சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்” என்ற ஒன்றை உடனடியாக துவங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மேலும் சனாதன தர்மத்தை இழிவு படுத்தும் வகையில் நடக்கும் இந்த விஷயங்களை முடிவு கட்ட நாம் அனைவரும் இணைய வேண்டும் கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் தளபக்கத்தில், பவன் கல்யாண் சார், இந்த சம்பவம் நீங்கள் துணை முதல்வராக இருக்கும் மாநிலத்தில் நடந்துள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு நீங்கள் ஏன் தேவையற்ற அச்சத்தை பரப்புகிறீர்கள். இந்த பிரச்னையை தேசிய அளவில் ஊதி பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே நாட்டுக்குள் பல சிக்கல்கள் இருக்கும் நிலையில் நீங்கள் புதிய பிரச்சினைகளை இங்கு கொண்டு வராதீர்கள. (மத்தியில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு நன்றி) என்று ட்வீட் செய்திருந்தார்.
நாட்டில் ஏற்கனவே மதம் சார்ந்த பிரச்னைகள் இருக்கிறது என்று குறிப்பிட்டு, மத்தியில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு, அதாவது பா.ஜ.க.வுக்கு நன்றி என்று மறைமுகமாகக் குறிப்பிட்டு இருந்தார். அதுமட்டுமில்லாமல், Just Asking” என்ற ஹேஷ்டேக் செய்திருந்தார். அவரின் கருத்துக்கு பவன் கல்யாண் செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்து இருந்தார்.
அதில், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்கள் உட்கொண்ட பிரசாதம் தூய்மையற்றது என்றால், ஒருவர் கூட பேசக்கூடாதா? அப்படிப் பேசுவது எப்படி மதச்சார்பற்ற அமைப்பை சீர்குலைக்கும்? இந்துக்களுக்கும் உணர்வுகள் உள்ளது. நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை. இப்படிப்பட்ட விஷயங்களைப் பேசக் கூடாது என்று நீங்கள் எப்படி சொல்லலாம்? பேசி இருந்தார்.
இதற்கு பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோடு விளக்கம் கொடுத்துள்ளார். அதில்,
பவன் கல்யாண் சார், செய்தியாளர் சந்திப்பில் நீங்கள் பேசியதை இப்போது பார்த்தேன். நான் சொன்னது என்ன? நீங்கள் தவறாக புரிந்து கொண்டது என்ன? நான் இப்போது வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறேன். 30ந் தேதிக்கு பிறகு வருகிறேன். வந்து உங்களின் அனைத்து கேள்விக்கும் நான் பதில் அளிக்கிறேன். அதற்குள் என் ட்வீட்டை மீண்டும் ஒருமுறை படித்து பார்த்து புரிந்துகொள்ளுங்கள் என்று பிரகாஷ் கூறியுள்ளார்.