பின் வாங்கிய ‘விடாமுயற்சி’… புத்தாண்டில் லைக்கா கொடுத்த அதிர்ச்சி
தல அஜித்தின் 62 வது திரைப்படமாக உருவாக்கி உள்ளது ‘விடாமுயற்சி’. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள இந்த படத்தை, லைகா நிறுவனம் சுமார் ரூ.300 கோடி செலவில் தயாரித்துள்ளது.
கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையில், ‘விடாமுயற்சி’ திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததால், அஜித்தின் ரசிகர்கள் இந்த பொங்கலை தல பொங்கலாக கொண்டாட காத்திருந்தனர்.
மேலும் நேற்றைய தினம் பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி, அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக வெளியாக வாய்ப்பில்லை என தன்னுடைய யூடியூப் சேனலான வலைப்பேச்சு தளத்தில் அறிவித்தது, அஜித் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களுக்கு ஆளானது.
ஆனால் எப்படியும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் கண்டிப்பாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, நேற்று இரவு லைகா அதிர்ச்சி கொடுக்கும் விதமாக புத்தாண்டு வாழ்த்துக்களுடன் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை என அறிவித்துள்ளது.
இது குறித்து லைகா வெளியிட்டு இருந்த அறிக்கையில்.. “அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். சில தவிர்க்க முடியாத காரணங்களால், விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டிலிருந்து தள்ளி வைக்கப்படுகிறது. இந்த புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம் என லைகா அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.
இந்த தகவல் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம், கண்டிப்பாக திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. எனினும் புதிய ரிலீஸ் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.
‘குட் பேட் அக்லீ’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்ட நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தால் அஜித்தின் அந்த படம் ரிலீஸ் தள்ளி போனது. ஆனால் இப்போது இரண்டும் இல்லாமல் போனதால், அஜித்தின் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.