விடுதலை – 2 படத்துக்காக மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
மலையாள திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவரை தமிழ் திரையுலகிற்கு முதன்முறையாக அழைத்து வந்தது இயக்குனர் வெற்றிமாறன் தான். அவர் இயக்கிய அசுரன் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மஞ்சு வாரியர்.
அசுரன் படத்தின் வெற்றிக்கு பின்னர் தமிழில் அஜித்தின் துணிவு மற்றும் ரஜினியுடன் வேட்டையன் ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தார் மஞ்சு வாரியர்.
இந்த நிலையில், அவர் கோலிவுட்டில் நடித்துள்ள நான்காவது படம் விடுதலை 2. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் வாத்தியார் கேரக்டருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் மஞ்சு வாரியர்.
விடுதலை படத்தின் முதல் பாகம் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகம் வருகிற டிசம்பர் 20ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து உள்ளார்.
விடுதலை முதல் பாகம் முழுவதும் சூரியின் குமரேசன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி நகர்ந்த நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க விஜய் சேதுபதியின் வாத்தியார் கதாபாத்திரத்தை சுற்றி நகர உள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோரின் இளமை பருவ கதாபாத்திரம் இடம்பெறுவதால், அவர்கள் இருவரையும் டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி இளமையாக காட்டி இருக்கிறார் வெற்றிமாறன்.
விடுதலை 2 திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அதில் நாயகியாக நடித்துள்ள நடிகை மஞ்சு வாரியர் அப்படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி விடுதலை 2 படத்தில் நடிக்க அவருக்கு ரூ.3 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். இதற்கு முன்னதாக ரஜினிக்கு ஜோடியாக வேட்டையன் படத்தில் நடிக்க ரூ.2 கோடி வாங்கிய மஞ்சு வாரியர், விடுதலை 2 படத்துக்காக ஒரு கோடி கூடுதலாக வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.