முக்கியமான 25 பேருக்கு விருது வழங்கும் விஜய்.. யார் அவர்கள்?
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை பிப்ரவரியில் தொடங்கி, இக்கட்சியின் முதல் மா நாட்டை கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் விஜய் பிரமாண்டமாக நடத்திக் காட்டினார்.
இம்மாநாட்டைத் தொடர்ந்து அவர் தமிழ் நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களுக்குச் சுற்றுப் பயணம் செய்து, நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து, தேர்தலுக்கு இப்போதில் இருந்தே தயார்படுத்தப் போவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தவெகவின் மாநாட்டில் கூடிய கூட்டம்தான் பெரிய அளவில் பேசுபொருளாக மாறியதே தவிர, அக்கட்சியின் கொள்கைகள் பற்றிய விவாதம் பெரியளவில் இல்லை. எனவே அடுத்தடுத்த திட்டங்கள் மூலம் மக்களிடம் தன் கொள்கைகள் சென்று சேர வேண்டும் என விஜய் தீவிரமாக இயங்கி வருகிறார்.
அதற்கேற்றபடி, வரும் 2026 சட்டசபைத் தேர்தலுக்கு திராவிட கட்சிகளுக்கு தவெக நெருக்கடி கொடுக்குமா? என்பது போகப் போகத்தெரியும். அதேபோல், விஜயுடன் வேறு எந்தக் கட்சிகள் கூட்டணி வைக்க காய் நகர்த்தும்? அல்லது விஜய் தனித்துப் போட்டியிட்டு தன் பலத்தை நிரூபிப்பாரா என்பது கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்த நிலையில், விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு நிலம் வழங்கிய சுமார் 25 பேருக்கு விஜய் நேரில் சந்தித்து அவர்களுக்கு விருது வழங்கவிருப்பதாக தகவல் வெளியாகிறது.
அதன்படி, வி.சாலையில் நடந்த தவெக முதல் மாநாட்டுக்கு மாநாட்டு திடல், பார்க்கிங் உள்ளிட்டவற்றிற்கு 230 ஏக்கர் நிலம் வரை விவசாயிகள் மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் எனப் பலரும் வாடகைக்கு நிலம் வழங்கியிருந்தனர். இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, உரிமையாளர்களுக்குப் பணமும் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகின.
இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் மாநாட்டுக்கு நிலம் வழங்கிய 25 பேருக்கு அக்கட்சித் தலைவர் விஜய் தன் கையால் விருது வழங்கியும், விருந்து வைத்து உணவும் பரிமாறவுள்ளார் எனத் தகவல் வெளியாகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.