சூர்யா – பிருத்விராஜ் இடையே சந்திப்பு.. அடுத்த பயோபிக் ரெடி!
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் ‘சூர்யா 42’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். 10 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம் 2023 இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறாது. இதனிடையே மலையாள நடிகர் பிருத்விராஜ்ஜை சூர்யாவும் ஜோதிகாவும் நேரில் சந்தித்தனர். அப்போது சூர்யா – ஜோதிகா ஜோடி, பிருத்விராஜ் அவரது மனைவியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நான்கு பேரும் எடுத்துக்கொண்ட க்யூட்டான போட்டோ இணையத்தில் வைரலானது.
சூர்யாவும் பிருத்விராஜ்ஜும் இதுவரை இணைந்து நடித்தது இல்லையென்றாலும், ஜோதிகா – பிருத்விராஜ் ஜோடி மொழி படத்தில் நடித்திருந்தனர். ராதாமோகன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் இன்றுவரை ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த சந்திப்பின் போது சூர்யாவின் தயாரிப்பில் பிருத்விராஜ் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை எழுந்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி தொழிலதிபர் ஒருவரின் பயோபிக்காக இந்தப் படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவலின் அடிப்படையில், பிரிட்டனியா நிறுவனத்தின் மறைந்த தொழிலதிபர் ராஜன் பிள்ளை வாழ்க்கை வரலாற்றில் பிருத்விராஜ் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து சூர்யா – பிருத்விராஜ் தரப்புகளில் இருந்து அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. அதேபோல், இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.