வடிவேலுவின் போலி டாக்டர் பட்டம் விவகாரம் : மனித உரிமை கொடுத்த விளக்கம்
பல வருடங்களாக தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் வடிவேலு சிறிது கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை தொடர்ந்து தற்போது அவர் கைவசம் மாமன்னன், சந்திரமுகி 2 திரைப்படங்கள் இருக்கின்றன.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட சிலருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை சங்கம் சார்பாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அதில் இந்த கௌரவ டாக்டர் பட்டத்தை ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் வழங்கினார்.
அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து அந்த டாக்டர் பட்டம் போலியானது என்ற விஷயம் பலருக்கும் அதிர்ச்சியை கிளப்பியது. அது மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவில் பலரும் இந்த விஷயத்தை கேலியும், கிண்டலும் செய்து வந்தனர். இப்படி இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஆனதை தொடர்ந்து தற்போது அதற்கான விளக்கம் வந்துள்ளது.
அந்த வகையில் ஊழல் எதிர்ப்பு மனித உரிமை சங்கத்தின் ஆணையர் இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, இந்த டாக்டர் பட்டம் போலியானது என்று செய்திகள் வெளி வருகிறது. ஆனால் அது உண்மை கிடையாது. சரியான ஒப்புதல் பெற்று தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது அதற்கான ஆதாரங்களும் இருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சி மட்டும் தான் இப்படி ஒரு தவறான தகவலை பரப்பி இருப்பதாகவும், தற்போது அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.