நடிகர் சூர்யாவை தொடர்பு கொண்டு பாராட்டு மழை பொழிந்த முதலமைச்சர் ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடிகர் சூர்யாவை தொலைபேசியில் அழைத்து பாராட்டிய விஷயம் தெரியவந்திருக்கிறது.
சூரரைப் போற்று படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சூர்யா நடித்த படம் ஜெய் பீம். 2021ம் ஆண்டு ஓடிடியில் வெளியான இப்படத்தில் லிஜோமோல், மணிகண்டன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். படத்தை பத்திரிகையாளர் த.செ.ஞானவேல் இயக்கியிருந்தார்.
1993ஆம் ஆண்டு இருளர் இனத்தை சேர்ந்தவர் மீது காவல் துறையினர் பொய் வழக்கு போட்டு காவல் நிலையத்தில் வைத்து அடித்தே கொன்ற உண்மை சம்பவத்தை வைத்து இந்தப் படம் உருவானது. இருளர் இனத்தவரை சேர்ந்தவராக மணிகண்டனும், அவருக்கு மனைவியாக லிஜோமோலும் நடித்திருந்தனர். சூர்யா சந்துரு என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி தமிழ்நாடு அளவில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. படம் வெளியான பிறகு தமிழ்நாடு அரசு சார்பில் இருளர் இன மக்களுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நடிகர் சூர்யாவும் இருளர் இன குழந்தைகளின் கல்விக்காக ஒரு கோடி ரூபாய் உதவியை செய்திருந்தார். மேலும் உண்மையில் உயிரிழந்த ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கும் பலர் உதவிகள் செய்தனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்தார். அப்போது அவரிடம் நீங்கள் முதலமைச்சரான பிறகு பார்த்த முதல் திரைப்படம் எது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், ” முதலமைச்சரான பிறகு நான் முதல்முதலாக பார்த்த திரைப்படம் ஜெய் பீம். அந்தப் படம் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஜெய் பீம் படத்தில் பொய் வழக்கு போட்டு கைதியை சிறையில் அடைத்து காவல் துறை எந்தளவு காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டது என்பதை பார்த்த பிறகு ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டேன். ஏனெனில், நான் மிசாவில் இருந்தபோது நானும் அந்தக் கொடுமைகளை அனுபவித்தேன். அந்தப் படம் பார்க்கும்போது அதுதான் எனக்கு நினைவில் வந்தது. அதனால் படம் முடிந்த உடனேயே சூர்யாவுக்கு ஃபோன் செய்து பாராட்டினேன். மேலும் படத்தின் இயக்குநர் ஞானவேலுவையும் அழைத்து பாராட்டினேன்” என்றார்.
ஜெய் பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் அடுத்ததாக ரஜினியை வைத்து படம் இயக்குகிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். ஜெய் பீம் படம் போலவே ரஜினியை வைத்து ஞானவேல் இயக்கும் படமும் உண்மை கதையை அடிப்படையாக வைத்து உருவாகப்போகிறது எனவும், படத்தில் இஸ்லாமிய காவல் துறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.