நயன்தாராவின் அன்னபூரணி விருந்து அறுசுவையா? அறுவையா.?
லேடி சூப்பர் ஸ்டாராக மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி இன்று வெளியாகி உள்ளது. ஜெய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
அன்னபூரணி கதை..
பிராமண குடும்பத்து பெண்ணான அன்னபூரணிக்கு சிறந்த செஃப்பாக வேண்டும் என்ற ஒரு லட்சியம் இருக்கிறது. அதற்கு தன்னுடைய குடும்ப கலாச்சாரமும், ஆச்சாரமும் தடையாக இருக்கும் நிலையில் வீட்டை விட்டு செல்கிறார் நயன்தாரா. இலட்சியத்தை தேடி செல்லும் அவர் சந்திக்கும் தடைகள் என்ன? கனவு நிறைவேறியதா? என்பதுதான் இப்படத்தின் கதை.
வழக்கமான குடும்ப பின்னணி கொண்ட கதையாக இருந்தாலும் சிறு வயதிலிருந்தே உணவின் மீது தீரா காதலுடன் இருக்கும் அன்னபூரணி கதையோடு நம்மை ஒன்றை வைத்து விடுகிறார்.
ஆச்சாரமான ஐயர் ஆத்து மாமியான நயன்தாரா கரண்டி பிடிக்கும் ஆசையில் சமையலை கற்றுக் கொள்வதும், அசைவ உணவுகளை ருசிப்பதும் என ஸ்கோர் செய்கிறார்.
அதிலும் தன்னுடைய லட்சியத்தை கண்களின் மூலம் உணர்வுகளாக கடத்துவதிலிருந்து ஒவ்வொரு காட்சிகளும் லேடி சூப்பர் ஸ்டார் தன்னை நிரூபித்துள்ளார். இதுவே அவர் கதையின் நாயகியாக ஜெய்ப்பதற்கும் ஒரு காரணமாக இருக்கிறது. அந்த வகையில் அன்னபூரணியாக இவர் மொத்த படத்தையும் தாங்கிப் பிடித்திருக்கிறார்.
அடுத்ததாக பின்னணி இசையும் படத்திற்கான மிகப்பெரிய பலம். கண்டக்டர் எல்லாரும் சூப்பர் ஸ்டார் ஆக முடியாது. புடிச்சு பண்ணா எல்லாரும் சூப்பர் ஸ்டார் ஆகலாம். பிரியாணிக்கு மதம் கிடையாது. எந்த கடவுளும் நான்வெஜ் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லல போன்ற வசனங்களும் கவனம் பெறுகிறது.
இப்படியாக முதல் பாதியில் இருக்கும் சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் கொஞ்சம் தடுமாறுகிறது. வழக்கமான காட்சிகளும் எளிதில் யூகிக்கும் படியாக இருக்கிறது. இருந்தாலும் சிறந்த குடும்பப் படைப்பாக வெளியாகி உள்ள அன்னபூரணியை தாராளமாக தியேட்டரில் சென்று பார்க்கலாம். ஆக மொத்தம் நயன்தாராவின் இந்த அன்னபூரணி அறுசுவை விருந்து.