அயலான் இந்த திரைப்படத்தின் காப்பியா? வெடித்தது சர்ச்சை
சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ள அயலான் திரைப்படம் ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி அடித்து எடுக்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ள திரைப்படம் அயலான். இப்படத்தை இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கி உள்ளார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இதுதவிர யோகிபாபு, இஷா கோபிக்கர், பானுப்பிரியா, கருணாகரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.
ஏலியனை மையமாக வைத்து தமிழில் எடுக்கப்படும் முதல் சயின்ஸ் பிக்சன் படம் இது என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் டிரைலரில் இடம்பெற்ற சிஜி காட்சிகள் ஹாலிவுட் தரத்துக்கு இருப்பதாக பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
சுமார் 7 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்த இப்படம் தற்போது திரைகாண உள்ளதால் அதனை காண ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
அயலான் திரைப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதற்கான புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அயலான் திரைப்படம் பிரபல ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு வெளிவந்த Paul என்கிற ஹாலிவுட் படத்தை காப்பி அடித்து தான் அயலான் திரைப்படத்தை எடுத்துள்ளதாக ஒப்பிட்டு வருகின்றனர்.
Paul படத்தின் கதைப்படி வழி தவறி பூமிக்கு வந்த ஏலியனை ஆராய்ச்சி பண்ணனும்னு நினைக்கிற ஒரு கூட்டத்துக்கிட்ட இருந்து காப்பாற்றி அதனை திரும்ப அதன் கிரகத்துக்கே அனுப்ப இரண்டு நண்பர்கள் அந்த ஏலியனோட சேர்ந்து அடிக்கிற லூட்டி தான் அதன் கதைக்கரு. தற்போது அயலான் திரைப்படமும் அதே போன்ற கதைக்களத்தை கொண்டு உருவாகி உள்ளதாக சொல்லப்படுவதால் அயலான் காப்பி அடித்து எடுக்கப்பட்டுள்ளதா என்கிற சர்ச்சை எழுந்துள்ளது.