கமல்ஹாசன், சிம்பு, உட்பட 4 நடிகர்களுக்கு ரெட் கார்டு?
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டம், நேற்று நடைபெற்றது. அதில் சில முன்னணி தமிழ் நடிகர்கள், தயாரிப்பாளர்களிடம் முன்தொகையை பெற்றுக்கொண்டு, குறிப்பிட்ட தேதியில் படத்தை நடித்து கொடுக்காமல் போக்கு காட்டி வருவதாகவும் அப்படி புகார் கொடுக்கப்பட்ட கமல்ஹாசன், சிம்பு, தனுஷ், விஷால் ஆகிய 4 நடிகர்களுக்கு ரெட் கார்டு போடப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த தகவல் பல ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த நிலையில் இது குறித்து தற்போது தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது,
“ஊடகங்களில் வெளியான தவறான ஒரு செய்தி கண்டு பேரதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன்.
‘நடிகர்கள் திரு.கமல்ஹாசன், திரு.தனுஷ், திரு.சிம்பு, திரு.விஷால் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு இனி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு அளிக்காது’
என்று ஊடகங்களில் பரப்பப்படும் செய்தி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ஏராளமான ஊடக நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் என்ற முறையில், இந்த தவறான செய்திக்கு விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளேன்…
தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக திரு.கமல், திரு.தனுஷ், திரு.சிம்பு மற்றும் திரு.விஷால் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் எந்த புகாரும் நிலுவையில் இல்லாத நிலையில், இவ்விதம் அவதூறாக செய்தி பரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக வலியுறுத்துகிறேன்…
மேலும், இது தொடர்பாக விசாரித்ததில், ‘முன்னணி நடிகர்கள் சிலர் மீதான புகார்கள் குறித்து ஆலோசித்தோமே தவிர எந்தவித நடவடிக்கை குறித்தும் முடிவெடுக்கவில்லை’ என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் உறுதி செய்திருப்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்…
தொடர்ந்து எங்கள் சங்க உறுப்பினர்கள் தொடர்பான துறை ரீதியான தவறான தகவல்களை பரப்புவோருக்கு, பொறுப்புள்ள ஊடகங்கள் ஒத்துழைப்பு மறுக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்…
துறை சார்ந்த பல சிக்கல்களுக்கு இடையே, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் இடையே தொடரும் இணக்கமான நட்புறவுக்கு ஊறு விளைவிக்க முயலும் சில விஷமிகளின் இந்த முயற்சி ஒரு போதும் பலன் தராது என்பதையும் உறுதிபட அறிவுறுத்துகிறேன்… என தெரிவித்துள்ளார்.