சிங்கம் போல கர்ச்சித்த விஜய்… “அவர இப்படி பார்த்ததே இல்ல” ராதிகா புகழாரம்

சிங்கம் போல கர்ச்சித்த விஜய்… “அவர இப்படி பார்த்ததே இல்ல” ராதிகா புகழாரம்
  • PublishedOctober 29, 2024

தளபதி விஜயின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்ற முடிந்தது. தமிழக வெற்றிக்கழகம் சார்பாக வருகின்ற 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் அவர் முதல்வர் வேட்பாளராக கலமிறங்குகின்றார்.

நேற்று தனது கட்சி மாநாட்டில் பேசிய தளபதி விஜய் பல விஷயங்களை பரபரப்பாக பேசியிருந்தது பலருக்கு மகிழ்ச்சியையும், சிலருக்கு பெரிய ஆச்சரியங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் நடிகர் விஜயின் பேச்சு குறித்து தனது கருத்தினை பதிவு செய்திருக்கிறார் நடிகையும் அரசியல் தலைவருமான ராதிகா சரத்குமார்.

பாஜக சார்பில் கோவையில் நடைபெற்ற விழா ஒன்றில் வானதி சீனிவாசனோடு பங்கேற்ற நடிகை மற்றும் அரசியல் தலைவர் ராதிகா சரத்குமார் தளபதி விஜயின் மாநாடு குறித்து சில விஷயங்களை பேசி இருந்தார்.

அதில், முதலில் தளபதி விஜய் தனியாக கட்சியை தொடங்கியிருப்பதற்கு என்னுடைய மனதார வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருமே அரசியலுக்கு மக்களுக்கு நன்மை செய்யத் தான் வருகிறார்கள். அதை அவர்களுடைய கொள்கைகளுக்கு ஏற்ப செய்வது நல்லது தான். தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நட்சத்திரமாக திகழ்ந்து வரும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று முடிவு செய்தது மிகச் சிறந்த முடிவு தான். ஆனால் அது எனக்கு பெரிய அளவில் ஆச்சரியங்களை கொடுத்தது.

சிறுவயதில் இருந்து எனக்கு விஜய் தெரியும், அவருடைய தந்தையின் இயக்கத்தில் நான் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். ஆகையால் இன்று அவர் இந்த வயதில் இப்படி ஒரு முடிவை எடுத்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் ராதிகா.

மேலும் திமுகவை நேரடியாகவும், அதிமுகவைப் பற்றி எதுவும் பேசாமலும், பாஜகவை மறைமுகமாகவும் தாக்கி விஜய் பேசியது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு..

“அவர் யோசித்து தான் அனைத்து விஷயங்களையும் பேசுவார். அப்படித் தான் திமுகவை நேரடியாக எதிர்த்து பேசி இருக்கிறார். ஆனால் பாஜகவை எதிர்த்து பேசுவதற்கு முன் கட்டாயம் அவர் யோசித்து தான் பேசுவார். அதிமுகவை பற்றி அவர் ஏன் பேசவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. அரசியலை அவர் வேறு விதமாகத்தான் பார்த்து வருகிறார். தெறி படத்தில் அவரோடு நான் நடித்திருக்கிறேன், அவர் பொதுவெளியில் பெருசாக பேசக்கூட மாட்டார். ஆனால் நேற்று நடந்த அந்த மாநாட்டு மேடையில் அவர் அவ்வளவு ஆக்ரோஷமாக பேசியது எனக்கு ஆச்சரியங்களை தந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார் ராதிகா சரத்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *