டஃப் கொடுக்கும் சூர்யா.. லியோவை ஓரங்கட்டியிள்ள சூர்யா 42 பிஸ்னஸ்
சூர்யா நடித்துவரும் அவரது 42ஆவது படத்தின் பிஸ்னஸ் லியோ படத்தைவிட அதிகம் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நேருக்கு நேர் படம் மூலம் திரையுலகில் அறிமுகமான சூர்யா தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவர். ஆரம்பத்தில் சிறிது தடுமாறினாலும் பாலா இயக்கிய நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்கள் சினிமாவில் சூர்யாவுக்கென்று ஒரு இடத்தை உறுதி செய்தன. அதேபோல் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் 1 மற்றும் சிங்கம் 2 உள்ளிட்ட படங்களும் சூர்யாவை கமர்ஷியல் ஹீரோவாக உயர்த்தின.
இப்படிப்பட்ட சூழலில் கடந்த 2020ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான படம் சூரரைப் போற்று. எளியவர்களும் விமானத்தில் செல்வதற்கான வழியை உருவாக்கும் ஹீரோ என்ற அடிப்படையில் உருவாகியிருந்த அந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி அந்தப் படத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது.
சூரரைப் போற்று படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்தோடு ஞானவேல் ராஜா இயக்கத்தில் ஜெய்பீம் படத்தில் கமிட்டானார் சூர்யா. இதில் சந்துரு என்ற வக்கீல் கதாபாத்திரத்தை ஏற்படுத்தியிருந்தார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்த ஜெய் பீம் மெகா ப்ளாக் ப்ஸ்டர் ஆனது. குறிப்பாக சமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தையும், அதிர்வுகளையும் படம் உருவாக்கியிருந்தது. அதேபோல் சந்துரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காக சூர்யாவுக்கு பலரும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தனர்.
இந்தப் படத்துக்கு பிறகு பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும், வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் நடிப்பதற்கு கமிட்டானார் சூர்யா. .ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை வணங்கான் படத்திலிருந்து விலகிவிட்டார். மேலும் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங்கும் தொடர்ந்து தாமதமாகிவருகிறது. இதற்கிடையே விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்திலும் கலக்கினார்.
மேலும், சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது நடித்துவருகிறார். 10 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகிவரும் படத்துக்கு தற்காலிகமாக சூர்யா 42 என்று பெயரிடப்பட்டுள்ளது. ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதன் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி படம் ஒரு பீரியட் ஃபிலிம் என்பது உறுதியானது.
இந்நிலையில் சூர்யா 42 படத்தின் பிஸ்னஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. மேலும் அந்த பிஸ்னஸில் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் பிஸ்னஸை சூர்யா 42 ஓரங்கட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது, லியோ படத்தின் ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியது. சாட்டிலைட் உரிமை 80 கோடிக்கும், ஓடிடி ரைட்ஸ் 150 கோடிக்கும் விற்பனையாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய நான்கு மாநில தியேட்டர் ரைட்ஸை சேர்த்து மொத்தம் 175 கோடிக்கு விலை பேசப்பட்டுள்ளதாம் ஆனால், சூர்யா 42 படத்தின் ப்ரீ ரிலீஸ் பிஸ்னஸானது, இதுவரை 500 கோடி ரூபாய்க்கும் அதிகம் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி கோலிவுட்டை வாய் பிளக்க வைத்திருக்கிறது.