ஆஸ்கர் நாயகன் கீராவாணியின் இசை பயணம் குறித்த சிறிய தொகுப்பு!
1990 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் அறிமுகம் ஆனாலும், 1991 ஆம் அண்டு கே. பாலசந்திர் இயக்கத்தில் வெளியான அழகன் திரைப்படம் மூலம் மரகத மணி என்ற பெயரில் தமிழில் அறிமுகமானவர் எம்.எம்.கீரவாணி.
அழகன் திரைப்படத்திற்காக தமிழக அரசின் விருதை தன் முதல் படத்திலேயே பெற்றுக்கொண்டார். 90களில் பெரும்பாலும் மொழிமாற்றம் செய்யப்பட்ட பெரும்பாலான தெலுங்கு படங்களில் கீரவாணியின் இசை ரசிகர்களை கவர்ந்தது.
1997 ஆம் ஆண்டு நாகர்ஜுனா நடித்த அண்ணமையா என்ற படத்திற்காக மனம் உருகும் பக்தி பாடல்களுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் தனதாக்கிக்கொண்டார்.
தெலுங்கில் எம்.எம்.கீரவாணி, தமிழில் மரகதமணி, ஹிந்தியில் எம்.எம்.க்ரீம் என்ற மூன்று பெயர்களில் 33 வருடங்களாக ஏராளமான விருதுகளை பெற்றிருந்தாலும், எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் அவரின் இசையை இந்தியா முழுவதும் பறைசாற்றியது.
ஆர்.ஆர்.ஆர் திரைப்படங்களில் பின்னணி இசைக்கு இணையாக பாடல்களிலும் மிரட்டியிருந்தார். குறிப்பாக நாட்டு நாட்டு பாடலுக்கு அவர் அமைத்திருந்த பாட்டும், பின்னணி இசையும் உலகளவில் கொண்டாட வைத்தது. இந்த பாடலுக்காக கோல்டன் குளோப் உள்ளிட்ட சர்வதேச அளவிலான பல விருதுகளை வாங்கிக் குவித்திருந்தாலும், உச்சமாக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
பாடலாசிரியர், சந்திபோசுக்கு இந்த விருது பகிர்ந்து வழங்கப்பட்டது. மெலடிபாடல்களால் திரையுலகில் கோலோச்சிய எம்.எம்.கீரவாணிக்கு கொண்டாட்ட பாடல் ஒன்று ஆஸ்கர் விருதை பெற்றுத்தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.