ஏஆர் ரஹ்மானுக்காக மெட்ரோ எடுத்துள்ள அதிரடி முடிவு… ரசிகர்கள் உற்சாகம்!
ஏஆர் ரஹ்மான் இசையில் பத்து தல, பொன்னியின் செல்வன் 2, மாமன்னன், லால் சலாம், KH 234 போன்ற படங்கள் வெளியாகவுள்ளன.இந்நிலையில், வரும் 19ம் திகதி சென்னையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியை காண ஏஆர் ரஹ்மான் ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் உள்ளனர்.இதனையடுத்து ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்காக சென்னை மெட்ரோ நிர்வாகம் ரயில் நேரத்தை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரோஜா திரைப்படம் மூலம் அறிமுகமான ஏஆர் ரஹ்மான், தொடர்ந்து 30 ஆண்டுகளாக பிஸியாகவே இசையமைத்து வருகிறார். கடந்தாண்டு அத்ரங்கி ரே, இரவின் நிழல், கோப்ரா, பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு படங்களுக்கு இசையமைத்திருந்தார். இந்தாண்டும் பத்து தல, பொன்னியின் செல்வன் 2, மாமன்னன், லால் சலாம் படங்கள் அவரது இசையில் உருவாகி வருகின்றன. இந்த பரபரப்புக்கும் நடுவில் ஏஆர் ரஹ்மான் சென்னையில் தனது இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.
உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் ஏஆர் ரஹ்மானிடம், சென்னையில் ஏன் உங்களது மியூசிக் கான்செர்ட் நடக்கவில்லையே என ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கேட்டிருந்தார். அவருக்கு பதிலளித்த ரஹ்மான், சென்னையில் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி கிடைக்க 6 மாதங்கள் ஆகிறது என குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவு வைரலான அதேவேகத்தில், ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி வரும் 19ம் திகதி மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த இசை நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதியானது, திரைப்பட படப்பிடிப்புகளின் போது உயிரிழந்த லைட் மேன்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இசை நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. அதனால், இதனைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை மெட்ரோ நிர்வாகம் ரயில்களின் நேரத்தை நள்ளிரவு 12 மணி வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.
வழக்கமாக இரவு 11 மணியுடன் முடிந்துவிடும் மெட்ரோ ரயில் சேவயை, இரவு 12 மணி வரை நீட்டித்துள்ளது மெட்ரோ நிர்வாகம். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோவின் வெளிப்புற பங்குதாரர் மார்க் மெட்ரோ நிறுவனத்தின் சார்பில் நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏஆர் ரஹமான் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. Wings of Love என்ற பெயரில் வரும் 19ம் திகதி இரவு 7 மணி முதல் 11:30 மணி வரை நடைபெறுகிறது.
அதனை முன்னிட்டு மெட்ரோ இரயில் சேவைகள் அன்று மட்டும் நள்ளிரவு 12:00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும், பல்வேறு இடங்களில் இருந்து நிகழ்ச்சியை கண்டுகளிக்க மெட்ரோ இரயில்களில் வரும் பயணிகள், QR Code பயணச்சீட்டு, பயண அட்டைகளை பயன்படுத்தி 20% ஆஃபர் பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது. 19ம் திகதியில் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் டூ நேரு உள்விளையாட்டு அரங்கம் வரை மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும். அதன்படி, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்தும், கடைசி இரயில் நள்ளிரவு 12:00 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோவின் இந்த அறிவிப்பு இசை ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.