அமீர்கான், சூர்யாவை வைத்து கஜினி 2 படமா?? முருகதாஸின் மாஸ்டர் பிளான்
சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை ஆரம்பித்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் உடனடியாக சல்மான் கானின் சிக்கந்தர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், சிவகார்த்திகேயன் படத்தை ஹோல்டில் வைத்து விட்டு அந்த படத்தை இயக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சல்மான் கான் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ள ஏ.ஆர். முருகதாஸிடம் பாலிவுட் நடிகர் அமீர்கான் கஜினி 2 படத்தை பண்ணலாமா? என கேட்க அவரும் உடனடியாக ஓகே சொல்லியிருப்பதாக லேட்டஸ்ட் தகவல்கள் கசிந்துள்ளன.
இதில், ஹைலைட் என்னவென்றால் சூர்யாவையும் வைத்து கஜினி 2 படத்தை இயக்க ஏ.ஆர். முருகதாஸ் முடிவு செய்திருப்பது தான் என்கின்றனர்.
தொடர்ந்து படங்கள் தோல்வியை தழுவி வந்த நிலையில், ஷாருக்கான் போல சில ஆண்டுகள் ஓய்வெடுக்க அமீர் கான் முடிவு செய்துள்ளார். ரஜினிகாந்தின் கூலி படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவும் ஒப்புக் கொண்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
இந்நிலையில், கஜினி 2 படத்தை உருவாக்கும் முயற்சியில் அமீர்கான் இறங்கியுள்ளதாகவும் சல்மான் கானை இயக்கி வரும் ஏ.ஆர். முருகதாஸிடம் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இருவரையும் வைத்து தனித்தனியாக பண்ணப் போகிறாரா அல்லது மல்டிவெர்ஸ் போல ஒரே படத்தில் இருவரையும் நடிக்க வைக்கப் போகிறாரா உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.