வசூல் மழையில் நயன்தாராவின் “அன்னபூரணி”

வசூல் மழையில் நயன்தாராவின் “அன்னபூரணி”
  • PublishedDecember 4, 2023

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ள அன்னபூரணி திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

நயன்தாராவுக்கு வயது 40-ஐ நெருங்கினாலும், தன்னுடைய நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளதோடு டாப் ஹீரோயினாகவும் வலம் வருகிறார்.

இந்த ஆண்டு நயன்தாராவுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது. ஏனெனில் இதுவரை தென்னிந்திய மொழி படங்களில் மட்டும் நடித்து வந்த நயன்தாரா, இந்த ஆண்டு தான் ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். அவர் அங்கு அறிமுகமான முதல் படமே ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.

ஜவான் படம் ரிலீஸ் ஆனதும் தமிழில் நயன்தாரா நடித்த இறைவன் படம் ரிலீஸ் ஆனது. ஆனால் அப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து கோலிவுட்டில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்று காத்திருந்த நயன்தாரா, தான் கதையின் நாயகியாக நடித்துள்ள அன்னபூரணி படம் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ளார்.

இப்படம் கடந்த டிசம்பர் 1-ந் தேதி ரிலீஸ் ஆனது. இப்படத்தை இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்கி உள்ளார்.

அன்னபூரணி படத்தில் நடிகை நயன்தாரா உடன் பிக்பாஸ் பூர்ணிமா, ஜெய், ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் வெறும் ரூ.60 லட்சம் மட்டுமே வசூலித்து இருந்தது. இதற்கு காரணம் மழை தான்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியதால் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு இருந்தாலும், தியேட்டரில் இப்படத்திற்கு வரவேற்பு குறைவாகவே இருந்தது.

இந்த நிலையில், அன்னபூரணி படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் இரண்டாம் நாளில் ரூ.90 லட்சம் வசூலை வாரிக்குவித்து உள்ளது. இதன்மூலம் 2 நாட்களில் ரூ.1.5 கோடி வசூலித்துள்ளது இப்படம். புயல், மழைக்கு மத்தியிலும் நயன்தாராவின் படம் பாக்ஸ் ஆபிஸில் பிக் அப் ஆகி உள்ளதால் படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இன்று விடுமுறை தினம் என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *