சின்னக்குயில் சித்ராவுக்கு வந்த சோதனை! மக்களே அவதானம்…
பிரபல பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா, பல்வேறு மொழிகளில் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். சிறு வயதில், திருவனந்தபுரம் காட்டன் ஹில் பெண்களுக்கான அரசு பள்ளியில் படித்த இவர், அங்கிருந்தே, தனது சங்கீத திறமையை படி படியாக வளர்த்து, இன்று டாப்பில் இருக்கிறார்.
இந்த நிலையில் இவர் பண மோசடி பிரச்சனையில் சிக்கியுள்ளார். இவர் நேரடியாக பண மோசடி பிரச்சனையில் சிக்கவில்லை என்றாலும், இவர் பெயரில் பல மோசடிகள் அரங்கேறி வருகிறது.
அதனால் மக்களை எச்சரிக்கையுடன் இருக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளார். இவர், தனது பெயரில் பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி மர்ம நபர்கள் பணமோசடி விளம்பரம் செய்துள்ளதாகவும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாடகி சித்ரா பெயரில் உருவாக்கப்பட்டுள்ள போலி கணக்கில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தூதராக இருக்கிறேன் என்றும், இதில் ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்து பங்குகளைப் பெற்றால் அதன் மதிப்பு ஒரு வாரத்தில் ரூ.50 ஆயிரம் வரை உயரும் என்றும் சித்ரா கூறுவது போல பதிவிட்டுள்ளனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாடகி சித்ரா, “அது நான் இல்லை” என்று உடனடியாக தெளிவுபடுத்தியுள்ளார். சித்ராவின் ரசிகர்களுக்கு ஐபோனை பரிசாகத் தருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த விளம்பரம் குறித்து தனது நண்பர்கள் மூலம் அறிந்த சித்ரா, இது தன் பெயரைப் பயன்படுத்தி நடக்கும் மோசடி என்றும், இதில் யாரும் ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.