38 வருடம் ஓடிப்போச்சி… இளையராஜா – வைரமுத்து பிரிவின் பின்னணி என்ன தெரியுமா?

38 வருடம் ஓடிப்போச்சி… இளையராஜா – வைரமுத்து பிரிவின் பின்னணி என்ன தெரியுமா?
  • PublishedMarch 24, 2024

இசைஞானி இளையராஜாவும் வைரமுத்துவும் பிரிந்து 37 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது ஏன் என்பது குறித்து பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது..

வைரமுத்துவை இளையராஜாவிடம் அறிமுகம் செய்து வைத்தது பாரதிராஜா தான். அவரது இயக்கத்தில் கடந்த 1980-ம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார் வைரமுத்து.

அப்படத்தின் கம்போசிங் போது மெட்டுக்கு பாட்டு எழுதுவீர்களா என இளையராஜா கேட்க, முயற்சி செய்கிறேன் என சொல்லிவிட்டு, பாடல் வரிகளை எழுதியதும் சொல்லட்டுமா அல்லது பாட்டாகவே பாடட்டுமா என வைரமுத்து சொன்னதை கேட்டு புருவம் உயர்த்தி பார்த்திருக்கிறார் இளையராஜா.

பாட்டாகவே பாடு என சொன்னதும், பாடிக்காட்டிய பாடல் தான், ‘இது ஒரு பொன்மாலை பொழுது’ என்கிற பாடல். பின்னர் ஆறு ஆண்டுகள் ஏராளமான படங்களில் இணைந்து பணியாற்றிய இருவருக்கும் ஒரு கட்டத்தில் நட்பில் விரிசல் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது.

வைரமுத்துவுக்கு பட வாய்ப்புகள் குவிந்ததால் குறித்த நேரத்தில் தனக்கு பாடல்களை தரவில்லை எனக்கூறி இருவரும் சில சமயங்களில் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் சிந்து பைரவி உள்பட சில படங்களில் வைரமுத்து எழுதிய பாடல் வரிகளில் தலையிட்டு இளையராஜா மாற்றம் செய்ததும் இவர்களின் பிரிவுக்கு அடித்தளம் போட்டதாக சொல்கிறார்கள்.

பின்னர் வைரமுத்துவின் பாடல்களில் இளையராஜாவின் தலையீடு அதிகரிக்க இறுதியாக இசைப்பாடும் தென்றல் படத்தின் பாடல் பதிவின் போது அது மோதலாக வெடித்துள்ளது. ‘எந்தன் கைகுட்டையை யார் எடுத்தது’ பாடலுக்காக வரிகளை எழுதி வைரமுத்து இளையராஜாவிடம் காட்ட, அது பிடிக்கவில்லை என்றும் தானே அப்பாடலை எழுதிக்காட்டுவதாகவும் சொல்லி இருக்கிறார். இதனால் கோபமடைந்த வைரமுத்து அங்கிருந்து வெளியேறிவிட்டாராம்.

அதன்பின்னர் இருவரும் இணைந்து பணியாற்றவே இல்லை. பல முன்னணி பிரபலங்களும் சமாதான முயற்சியில் இறங்கியும் இருவரும் அதற்கு செவிசாய்க்கவில்லை. பின்னர் ஏ.ஆர்.ரகுமான் எனும் இசைப்புயலின் ஆதிக்கம் கோலிவுட்டில் அதிகரிக்க, அவருடன் சேர்ந்து பயணித்து தான் இழந்த இடத்தை மீண்டும் பிடித்துவிட்டார் வைரமுத்து.

பல ஆண்டு பிரிவுக்கு முடிவுகட்ட வைரமுத்து முனைப்பு காட்டியது அவரது பல மேடை பேச்சிலேயே தெரிந்தது. ஆனால் இளையராஜாவின் பிடிவாதத்தால் அது நடக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு சீனு ராமசாமியின் படங்களுக்கு தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்த வைரமுத்து, அவர் இயக்கிய மாமனிதன் படத்திற்கும் பாடல்கள் எழுதுவதாக இருந்தது. அப்படத்திற்கு யுவன் மற்றும் இளையராஜா இணைந்து இசையமைத்து இருந்தனர்.

யுவன் இசையில் வைரமுத்து பல பாடல்களை எழுதி இருப்பதால் அவர் மாமனிதன் படத்தில் வைரமுத்து பணியாற்ற கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார். ஆனால் இளையராஜா சம்மதிக்கவில்லையாம். அதனால் இருவரையும் இணைப்பதற்கான இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இது ஒருபுறம் இருக்க பி சுசிலாவுக்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் இசைஞானி இளையராஜாவும், வைரமுத்துவும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

அப்போது முதலில் மேடையேறி பேசிய இளையராஜா, பாடலாசிரியர்கள் குறித்து பேசுகையில், கவியரசர் கண்ணதாசனை விட சிறந்த பாடலாசிரியர் எவரும் இல்லை என்று மறைமுகமாக வைரமுத்துவை தாக்கி பேசி இருந்தார்.

இதன் பின்னர் பேச வந்த வைரமுத்து. கவியரசர் கண்ணதாசன் சிறந்த பாடலாசிரியர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் எம்.எஸ்.விஸ்வநாதனை தவிர சிறந்த இசையமைப்பாளர் எவரும் இல்லை என ஆவேசமாக பேசி பதிலடி கொடுத்தார்.

இருவரின் இந்த மேடைப்பேச்சும் அவர்கள் இணைய வாய்ப்பே இல்லை என்பதை உணர்த்தும் விதமாக அமைந்திருந்தது.

இளையராஜாவின் பிரிவு குறித்து வைரமுத்து ஒரு கவிதையே எழுதியிருக்கிறார். அதில் மனைவியின் பிரிவுக்கு பின்பு அவள் புடவையை தலையில் வைத்து படுத்திருக்கும் கணவனை போல, நினைவுகளுடன் நான் நித்திரை கொள்கிறேன். திரையுலகில் நான் அதிகம் செலவிட்டது உன்னிடம் தான். பெண்கள் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீ தான். ஈரமான ரோஜாவே எழுதிவிட்டு ஆழியார் அணையில் நடந்துகொண்டிருந்தோம். திடீரென நீ என்னை துரத்தினாய், நான் ஓடினேன்.

நீ துரத்திக் கொண்டே இருந்தாய், நான் ஓடிக் கொண்டே இருந்தேன். மழை வந்தது. நின்றுவிட்டேன், என்னை நீ பிடித்துவிட்டாய். அப்போது சேந்துவிட்டோம். ஏனென்றால் அப்போது இருவரும் ஒரே திசையில் ஓடிக்கொண்டிருந்தோம். ஆனால் இப்போது முடியுமா, இருவரும் வெவ்வேறு திசையிலல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டிருந்தார்.

இருவேறு திசைகளில் ஓடுபவர்கள் ஒரு புள்ளியில் இணைவதற்காக சாத்தியக் கூறுகள் மிக மிக அதிகம் என்பதால், இந்த இருபெரும் இமயங்கள் இணைய வேண்டும் என்பதே கோடானகோடி ரசிகர்களின் கனவாக உள்ளது. அது நடக்குமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *