இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி இலங்கையில் திடீர் மரணம்
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி (வயது 47) உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார்.
கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலுக்காக பவதாரிணிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
1984-ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘திதிதே தாளம்’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து, ‘ராசய்யா’, ‘அலெக்சாண்டர்’, ‘தேடினேன் வந்தது’, ‘காதலுக்கு மரியாதை’, ‘அழகி’, ‘பிரண்ட்ஸ்’, ‘தாமிரபரணி’, ‘உளியின் ஓசை’, ‘கோவா’, ‘மங்காத்தா’, ‘அனேகன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.
தவிர, கடந்த 2002-ம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான ‘மித்ர் மை பிரண்ட்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.
தொடர்ந்து, ‘பிர் மிலேங்கே’ (இந்தி), ‘அமிர்தம்’, ‘இலக்கணம்’, ‘மாயநதி’ படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
பவதாரணி கடந்த 5 மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்ற அவர், அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 5.20 மணி அளவில் இலங்கையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
அவரது உடல் வெள்ளிக்கிழமை மாலை சென்னை கொண்டுவரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.