‘தங்கலான்’ மற்றும் ‘கங்குவா’ ரிலீஸில் சிக்கல் செக் வைத்தது நீதிமன்றம்
நடிகர் விக்ரம், ‘ஐ’ திரைப்படத்திற்குப் பின்னர், அதிக அளவில் உடலை வருத்திக்கொண்டு நடித்து முடித்துள்ள திரைப்படம் தங்கலான்.
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாக்கி உள்ள இந்த திரைப்படம், சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
இந்த படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் சேர்ந்த அர்ஜுன் லால் என்பவரிடம் ஞானவேல் ராஜா மற்றும் ஈஸ்வரி ஆகியோர் வாங்கிய கடன் தான் தற்போது இவர்களை இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது. அதாவது, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அர்ஜுன் லால் அதிக அளவில் கடன் பெற்றதாக கூறி திவால் ஆனதாக நீதிமன்றத்தின் மூலம் அறிவிக்கப்பட்டார். தற்போது இவருடைய சொத்துக்கள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ளது.
அர்ஜுன் லால் சுந்தரிடம், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் ரூபாய் 10 கோடியே 35 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த கடன் தொகையை வட்டியுடன் கொடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றம் வாங்கிய பணத்தை செலுத்தும்படி ஞானவேல் ராஜா மற்றும் ஈஸ்வரனுக்கு உத்தரவிட்டது.
இவர்கள் பணத்தை இன்னும் திரும்ப செலுத்தாத நிலையில், ஞானவேல் ராஜா மற்றும் ஈஸ்வரன் ஆகியோரை திவால் ஆனவராக அறிவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் ஒன்று செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றம் தங்கலான் மற்றும் கங்குவா ஆகிய படங்களை ரிலீஸ் செய்யும் முன்னாள், நீதி மன்றத்தில் ரூ.1 கோடி டெப்பாசிட் கட்டிய பின்னர் தான், வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. தங்கலான் படம் வெளியாக இடையில் இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இப்படி ஒரு பிரச்சனை வந்துள்ளதால், குறிப்பிட்ட தேதியில் இப்படம் ரிலீஸ் ஆகுமா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.