தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை படமாக எடுத்து தேசிய விருது வாங்கிய கமல்

தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை படமாக எடுத்து தேசிய விருது வாங்கிய கமல்
  • PublishedSeptember 17, 2024

உலகநாயகன் கமல்ஹாசனுக்கும் நடிகை சரிதாவுக்கும் மகளாக பிறந்தவர்கள் தான் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன். மனைவி சரிதாவை பிரிந்த பின்னரும் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய மகள்கள் மீது அதீத பாசம் கொண்டிருக்கிறார். அப்படி ஒருமுறை கமல்ஹாசன் வீட்டில் வேலை பார்ப்பவர்கள் அவரது மகள்கள் இருவரையும் கடத்த முயன்றிருக்கிறார்கள். அந்த சம்பவத்தை கமல்ஹாசன் முறியடித்து மகள்களை காப்பாற்றி இருக்கிறார். அதை மையமாக வைத்து ஒரு படத்தையே எடுத்திருக்கிறார் கமல்.

அந்த படம் தான் மகாநதி. கடந்த 1994-ம் ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதி ஹீரோவாக நடித்த படம் இது. இப்படத்தின் கதைப்படி கமலின் மகளை ஒரு கும்பல் கடத்திச் சென்று அவர்களை கொல்கத்தாவில் உள்ள விபச்சார விடுதியில் விற்றுவிடுவார்கள்.

பின்னர் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் மகளை கண்டுபிடித்து அழைத்து வரும் கமல், சம்பந்தப்பட்டவர்களை பழிக்குப்பழி வாங்குவதுபோன்று திரைக்கதை அமைத்திருப்பார்.

இது உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை என்பதை 20 ஆண்டுகளுக்கு பின்னர் தான் வெளியிட்டார் கமல். தன் மகள்களை வீட்டில் வேலை பார்ப்பவர்கள் கடத்த முயன்றதை அறிந்து கடும் கோபமடைந்த கமல், அவர்களை கொலை செய்யவும் தயாராக இருந்ததாக பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். மகள்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்த பின்னரே கமல்ஹாசன் இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.

இப்படத்தின் கதைக்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனால் அதன் பின்னணியிலும் ஒரு சுவாரஸ்ய கதை இருக்கிறது. மகாநதி படத்திற்கு முதலில் ‘மீண்டும் சொர்க்கம்’ என்கிற தலைப்பை தான் வைத்திருந்தாராம் கமல். பின்னர் படத்தில் இடம்பெறும் பிரதான கதாபாத்திரங்களுக்கு, கிருஷ்ணா, காவேரி, யமுனா, பரணி என நதிகளின் பெயர்களே சூட்டப்பட்டு இருக்கும். அதன் அடிப்படையில் தான் இப்படத்திற்கு மகாநதி என பெயரிட்டு இருக்கின்றனர்.

மகாநதி திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்தது. சிறந்த ஒலிப்பதிவு மற்றும் சிறந்த படம் ஆகிய இரண்டு பிரிவுகளில் மகாநதி படம் தேசிய விருதை தட்டிச் சென்றது.

இதில் சிறந்த ஒலிப்பதிவுக்காக தேசிய விருது வாங்கிய முதல் தமிழ் படமும் இதுதான். உண்மையான ஜெயில் எப்படி இருக்கும் என்பதை கண்முன் கொண்டுவந்து காட்டிய திரைப்படம் என்றால் அது மகாநதி தான்.

இந்திய சினிமா வரலாற்றில் முதன்முதலில் ஆவிட் சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டு எடிட் செய்யப்பட்ட படம் மகாநதி. இப்படம் அறிமுகப்படுத்திய இந்த டெக்னாலஜி பின்னாளில் தமிழ் சினிமாவில் மற்ற படங்களிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டது. இத்தகைய சிறப்பு கொண்ட மகாநதி திரைப்படம் கடந்த 1994-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்து மாபெரும் வரவேற்பை பெற்றது. தன்னுடைய சிறந்த 25 படங்கள் பட்டியலில் மகாநதி படத்தை கமல்ஹாசன் பட்டியலிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *