முழுக்க முழுக்க கடத்தல் பணத்தில் எடுக்கப்பட்ட படம் “மங்கை”.. வெளிவந்த உண்மை..

முழுக்க முழுக்க கடத்தல் பணத்தில் எடுக்கப்பட்ட படம் “மங்கை”.. வெளிவந்த உண்மை..
  • PublishedMarch 10, 2024

கயல் படத்தில் நாயகியாக நடித்து பிரபலமான நடிகை ஆனந்தி கதாநாயகியாக நடித்த மங்கை திரைப்படம் முழுக்க முழுக்க போதைப்பொருள் கடத்தல் பணத்தில் தயாரிக்கப்பட்ட படம் என்று மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் ஞானஸ்வர் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து தேங்காய் பவுடர், டிரை ப்ரூட்ஸ் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்டுகளில் மறைத்துவைத்து போதைப் பொருள் தயாரிக்கும் முக்கிய வேதிப்பொருள் கடத்தப்படுவதாக, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்கள் மேற்கொண்ட சோதனையில், டெல்லியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 50 கிலோ வேதிப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

இவர் திமுக சென்னை மேற்கு மாவட்ட செயல் அணி துணை அமைப்பாளராகவும், சினிமா தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். போதைப் பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக் சிக்கியதையடுத்து அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து, சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டன. இதையடுத்து, ஜாபர் சாதிக் தலைமறைவானார்.

மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இவரை தேடி வந்த நிலையில், ஜாபர் சாதிக் நேற்று கைது செய்யப்பட்டார். ஜாபர் சாதிக் கைது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் ஞானஸ்வர் சிங், கடந்த மூன்று ஆண்டுகளில் 3,500 கிலோவுக்கு மேற்பட்ட சூடோபெட்ரின் போதைப்பொருளை பல நாடுகளுக்கு கடத்தியிருக்கிறார்.

இதன் மூலம் கிடைத்த பணத்தை திரைப்படங்களில் முதலீடு செய்திருக்கிறார். இவரின் தயாரிப்பில் உருவான மங்கை திரைப்படம் முழுக்க முழுக்க போதைப் பொருள் கடத்தல் மூலம் வந்த பணத்தில் எடுக்கப்பட்டது என்றார்.

ஒரு பெண்ணின் பயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மங்கை திரைப்படத்தில் கயல் ஆனந்தி லீட் ரோலில் நடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் மூலம் புகழ் பெற்ற சிவின் கணேசன், துஷ்யந்த் ஜெயபிரகாஷ், ஆதித்யா கதிர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை அமைச்சர் குபேந்திரன் காமாட்சி இயக்கி உள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் வெளியிட்டனர். இந்த விவகாரத்தில் சினிமா பிரபலங்கள் யார் யார் எல்லாம் சிக்கப்போகிறார்கள் என்று தெரியாமல் கோலிவுட்டே ஸ்தம்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *