‛‛விஜய் என்ன சூப்பர்ஸ்டாரா?” ஓபனாக பேசி சர்ச்சையை கிளப்பிய சந்திரசேகர்
இயக்குனர் எழில் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான படம் ‛தேசிங்கு ராஜா’. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த விமல், இதிலும் ஹீரோவாக நடிக்கிறார்.
ஹீரோயினாக பூஜிதா பொன்னாடா நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஜனா, ஹர்ஷிதா, சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா என பலரும் நடித்து வருகின்றனர். வித்யாசாகர் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
தேசிங்கு ராஜா-2 படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது:
சினிமாவுக்கு வருகின்ற இளைஞர்கள் ஒரு கதையுடன் வாருங்கள். உங்களுக்கென்று ஒரு பொறுப்புணர்ச்சி உள்ளது. ஒரு அப்பாவாக, அண்ணனாக இதனை சொல்லிக்கொள்ளும் தகுதி இருப்பதால் தெரிவிக்கிறேன்.
அந்த காலத்தில் 10 தலையை வெட்டுகிறவர்களை வில்லன் என சொன்னோம். ஆனால் இன்னைக்கு அதே விஷயத்தை ஹீரோவை பண்ண வைக்கிறீர்கள். இது எப்படின்னு எனக்கு புரியவில்லை. இதை எப்படி நாம் சினிமான்னு ஏற்றுக் கொள்கிறோம், கொண்டாடுகிறோம்? இளைஞர்களுக்கு நீயும் கத்தி எடுத்து 10 பேரை வெட்டுன்னு சொல்ல வருகிறோமா? ஏனென்றால் இன்றைய இளைஞர்கள் எல்லாம் ஹீரோ என்ன சட்டை போடுகிறார், ஹேர்ஸ்டைல் பண்ணுகிறார் என்பதை பின்பற்றி அப்படியே செய்கிறார்கள்.
தயவுசெய்து உங்கள் காலை தொட்டு கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன். நல்ல விஷயங்களை படமாக எடுங்கள். இரண்டரை மணி நேர படத்தில் 3 நிமிடங்கள் நல்ல விஷயங்களை சொல்லுங்கள்.
எழிலை பொறுத்தவரை நான் அவரிடம் விஜய்யை வைத்து துள்ளாத மனமும் துள்ளும் படம் பண்ணுவதற்கு முன் ஒரு கேள்வி கேட்டேன். அதை அவர் தன் படத்தின் மூலம் பதிலாக சொன்னார். அந்த படம் வெள்ளி விழா கொண்டாடியது. அப்ப என்ன விஜய் சூப்பர் ஸ்டாரா? இல்லையே.
அந்த கதை அவரை தூக்கி விட்டது. அந்த படத்துக்குப் பின் தான் விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகமானார்கள். நான் உண்மையை ஒப்புக் கொள்வதில் தயங்க மாட்டேன். அந்த படத்தில் யார் நடித்திருந்தாலும் வெள்ளி விழா கொண்டாடியிருக்கும்.
சமீபத்தில், ஒரு படத்தின் முதல் பிரதியை ரிலீஸுக்கு 5 நாட்களுக்கு முன்பு பார்த்தேன். பிறகு படத்தின் இயக்குனரை அழைத்து முதல் பாதி சூப்பர் என்று குறிப்பிட்டேன். பிறகு ‛இரண்டாம் பாதி சரியில்லை அந்த மதத்தில் அந்த நம்பிக்கையெல்லாம் இல்லை என்றேன். ஒரு தகப்பனே பிள்ளையை அப்படி பலி கொடுக்க மாட்டார்’னு சொன்னேன். அதுவரை கேட்டுக் கொண்டிருந்த படத்தின் இயக்குனர், ‛நான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன் சார் அப்புறம் பேசுகிறேன்’ என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்; திரும்ப அழைக்கவில்லை.
படம் ரிலீஸ் ஆனதும் எல்லாரும் வச்சு செஞ்சாங்க. அவர்கள் நான் சொல்வதைக் கேட்டு 5 நாட்களுக்கு முன்பே மாற்றியிருக்கலாம். விமர்சனங்களை தாங்கும் தைரியமோ ,பக்குவமோ அவர்களுக்கு இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
விஜய் – சந்திரசேகர் இடையே மனகசப்பு இருப்பதாக சில காலமாக செய்திகள் வந்துக்கொண்டிருந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் தனது அப்பாவை நேரில் சந்தித்த புகைப்படத்தை விஜய் பகிர்ந்தார். தற்போது சந்திரசேகர், லியோ படம் சரியில்லை என மறைமுகமாக பேசியது வைரலான நிலையில் மீண்டும் விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.