பாக்ஸ் ஆபிஸில் ருத்ரதாண்டவம் ஆடும் சலார்…

பாக்ஸ் ஆபிஸில் ருத்ரதாண்டவம் ஆடும் சலார்…
  • PublishedDecember 25, 2023

பிரபாஸ், பிருத்விராஜ் நடித்துள்ள சலார் திரைப்படம் கடந்த வாரம் 22ம் தேதி வெளியானது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படம், வசூலில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது.

இந்தாண்டின் மிகப் பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை சலார் முறியடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சலார் படத்தின் மூலம் பிரபாஸ் – பிரசாந்த் நீல் கூட்டணி முதன்முறையாக இணைந்தது. உக்ரம், கேஜிஎஃப் படங்களுக்குப் பின்னர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள சலாருக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.

அதே எதிர்பார்ப்புடன் பிரபாஸ் ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தனர். பாகுபலிக்குப் பின்னர் பிரபாஸ் நடித்த படங்கள் எதுவுமே அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை. இதனால் மொத்த நம்பிக்கையுடன் சலார் படத்தில் நடித்திருந்தார் பிரபாஸ்.

அதற்கு பலன் சேர்த்துள்ளது சலார் திரைப்படம். பான் இந்தியா படமாக தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியானது சலார். முதல் நாளில் தரமான ஓபனிங் கிடைத்ததால், 178 கோடி ரூபாய் வசூலித்து இந்தாண்டின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் சாதனையில் மாஸ் காட்டியது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் 117 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஆகமொத்தம் முதல் இரண்டு நாட்களில் 295 கோடி ரூபாய் வசூல் என்ற இமாலய சாதனையை படைத்தது. ஷாருக்கானின் பதான், ஜவான், விஜய்யின் லியோ படங்கள் தான் 2023ல் முதல் மூன்று நாட்களில் அதிகம் வசூலித்த படங்கள் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறி வந்தன.

அது தற்போது சலார் படத்தால் பிரேக் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மூன்றாவது நாளான நேற்றும், சலார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், சலார் படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதியுள்ளது. இதன் காரணமாகவே நேற்றும் 100 கோடி ரூபாய்க்கு அதிகமாக கலெக்‌ஷன் செய்துள்ளது. அதன்படி முதல் மூன்று நாட்களில் சலார் வசூல் 400 கோடி ரூபாயை கடந்துள்ளது.

இதனால் பிரபாஸ் உட்பட சலார் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. அதேநேரம் இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. மேலும் கேஜிஎஃப் படங்களை விட சுமார் என்றே ரசிகர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *