விடுதலையின் பொது எனக்கு மன அழுத்தம்தான் வந்தது – மனம் திறந்த ஹீரோயின்
விடுதலை படத்தில் நடித்தபோது பழங்குடியின மக்கள் பட்ட கஷ்டத்தை நினைத்து மன அழுத்தம் வந்ததாக நடிகை பவானி ஸ்ரீ கூறியிருக்கிறார்.
சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இப்படத்தின் முதல் பாகம் கடந்த 31ம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. சூரி குமரேசன் கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி வாத்தியார் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இவர்கள் தவிர கௌதம் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோரும் படத்தில் நடித்திருக்கின்றனர். படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
படத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்திருக்கிறார். இவர் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலை படம்தான் அவருக்கு முதல் படமாக இருந்தாலும் அவரின் நடிப்பை பார்த்த பலரும் இது முதல் படம் போலவே இல்லை. தேர்ந்த நடிப்பை பவானி வெளிப்படுத்தியிருக்கிறார் என புகழ்ந்திருக்கின்றனர். படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் பவானி ஸ்ரீ சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விடுதலை படத்தின் அனுபவங்கள் குறித்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “ஒரு நாள் வெற்றிமாறன் சாரிடமிருந்து போன் “ஒரு சின்ன ரோல் இருக்கு… பண்ண விருப்பம் இருக்கா?” என்றார். நான் ஆடிப்போய்விட்டேன். எவ்வளவு முக்கியமான இயக்குநர் சின்ன கேரக்டர்களைக்கூட எவ்வளவு ஸ்ட்ராங்காக எழுதிவிடுவார்.
அவர் ஃபோன் செய்த அடுத்த ஒரு மணி நேரத்தில் அவருடைய அலுவலகத்தில் இருந்தேன். உங்க கேரக்டர் பற்றி இப்போ சொல்ல மாட்டேன். நீங்கள் ஸ்பாட்டுக்கு வாங்க… எந்தத் தயாரிப்பும் இல்லாம வரணும். அப்பத்தான் சரியாக இருக்கும்” என்றார். அதன்பிறகு ஸ்பாட்டில் அவர் காட்சியையும் அதில் என்னிடம் எதிர்பார்ப்பதையும் விளக்கிச் சொல்லும்போதே நாம் எப்படி அந்தக் காட்சியில் பேசணும் நடக்கணும் என்று தெரிந்துவிடும். மறந்தும் நடித்துவிட மட்டும் கூடாது.
முதலில் இயற்கை, இயற்கை வளங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றிச் சொல்லிவிட்டு, மலைவாழ் மக்களின் வாழ்க்கை குறித்து நிறைய எடுத்துச் சொன்னார். அவர்கள் பட்ட பல துன்ப, துயரங்கள், இப்போதும்கூட எவ்வளவு கஷ்டங்களைச் சந்திக்கிறார்கள் என்பதையெல்லாம் எடுத்துச் சொன்னார்.
அப்படிப்பட்ட ஒரு மலைவாழ் பெண்ணாக இருந்தாலும் தமிழரசி என்பவள் இயலாமை, மன வலிமை இரண்டுமே உள்ள ஒரு கதாபாத்திரம் என்பதை எனக்குச் சொன்னார். பொலிஸ் ந்த அளவுக்கு டார்ச்சர் செய்திருக்கிறார்களா என்று சித்ரவதைக் காட்சிகளில் நடித்தபோது எனக்கு மன அழுத்தம் உருவாகிற அளவுக்கு எண்ணினேன். கிளிசரின் தேவைப்படாமலேயே அழுதேன்” என கூறினார்.