பிரபல நடிகையின் ஆபாச படங்கள்… மீண்டும் கைதான வாலிபர்

பிரபல நடிகையின் ஆபாச படங்கள்… மீண்டும் கைதான வாலிபர்
  • PublishedJanuary 20, 2024

கேரள மாநிலம் சங்கனாச் சேரியை சேர்ந்தவர் பிரபல திரைப்பட நடிகை பிரவீணா.  இவர் மலையாளத்தில் பல திரைப்படங்கள் மற்றும் டி.வி. சீரியல்களில் நடித்திருக்கிறார். பிரபலமான தமிழ் டி.வி. சீரியல் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இவர் தமிழில் கோமாளி, தீரன் அதிகாரம் ஒன்று, வாத்தி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தனது புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து இணையதளங்களில் யாரோ பரப்பி வருவதாக புகார் செய்தார்.

அதன்பேரில் நெல்லையைச் சேர்ந்த பாக்யராஜ் (வயது24) என்பவரை கடந்த 2021-ம் ஆண்டு கேரள போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கில் அவர் சில மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் அந்த வழக்கில் இருந்து வாலிபர் பாக்யராஜ் ஜாமினில் வெளியே வந்தார்.

இந்நிலையில் நடிகை பிரவீணா மற்றும் அவரது மகளின் புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு போலியாக உருவாக்கபபட்ட ஐ.டி.க்களில் இருந்து சமூக வலைதளங்களில் வெளியாகின. அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த நடிகை பிரவீணா, அது தொடர்பாக கேரள சைபர் கிரைம் போலீசில் மீண்டும் புகார் செய்தார்.

நடிகை படத்தை ஏற்கனவே ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பிய வாலிபர் பாக்யராஜ், நடிகையை பழிவாங்கும் விதமாக அவ்வாறு செயல்பட்டதாக கூறப்பட்டது. அதன் அடிப்படையில் கேரள சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

வாலிபர் பாக்யராஜ் எங்கு இருக்கிறார் என்று போலீசார் துப்பு துலக்கி வந்தனர். அவரை பிடிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் பாக்யராஜ் பற்றிய தகவல்களை ரகசியமாக சேகரித்தனர். அப்போது அவர் டெல்லியில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை பிடிக்க அமைக்கப்பட்ட கேரள சைபர் கிரைமை சேர்ந்த குழுவினர் டெல்லி விரைந்தனர். அங்கு வாலிபர் பாக்யராஜை சுற்றிவளைத்து பிடித்தனர். நடிகை மற்றும் அவரது மகள் படத்தை ஆபாசமாக சித்தரித்து பரப்பிய வழக்கில் சைபர் கிரைம் போலீசார் அவரை மீண்டும் கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப் பட்ட பாக்யராஜை கேரளாவுக்கு அழைத்து வந்தனர். வழக்கு தொடர்பாக அவரிடம் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *