20 வருட சட்ட போராட்டம் – கவுண்டமணிக்கு கிடைத்த வெற்றி

  • PublishedMay 14, 2024

1980-களில் தமிழ் சினிமாவில் டாப் காமெடி நடிகராக வலம் வந்த கவுண்டமணி, கடந்த 1996-ஆம் ஆண்டு கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவருக்கு சொந்தமான 5 கிரவுண்டு மற்றும் 454 சதுர அடி நிலத்தை கிரையம் செய்து, அங்கு வணிக வளாக கட்டிடம் ஒன்றை கட்ட திட்டமிட்டார்.

அதன்படி ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்கிற கட்டுமான நிறுவனத்திடம் அந்த இடத்தை ஒப்படைத்த கவுண்டமணி 22,700 சதுர அடி பரப்பளவில் வணிக வளாகம் ஒன்றினை 15 மாதங்களில் கட்டி முடித்து தர வேண்டும் என்கிற நிபந்தனையுடன், ரூ.3.58 கோடியை கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் கட்டிக் கொடுக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்த அந்நிறுவனம் சொன்னபடி கட்டிமுடிக்கவில்லை. இதனால் 2004 ஆம் ஆண்டு முழுமையாக கட்டுமான பணிகள் கைவிடப்பட்டது.

இதையடுத்து கவுண்டமணி தரப்பில் இருந்து கேட்டபோது கட்டுமான நிறுவனத்தினர் வலுக்கட்டாயமாக வளாகத்திற்குள் நுழைந்து சில அடியாட்களை அங்கு வர வைத்து இடத்தை கையகப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திற்கு எதிராகவும், சொத்தை மீட்டு தரக் கோரியும் கவுண்டமணி தரப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கவுண்டமணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. மேலும் உரிமையின்றி சொத்தை ஆக்கிரமித்துள்ளதால், கவுண்டமணிக்கு இழப்பீடு வழங்கவும் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே நடிகர் கவுண்டமணியின் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஸ்ரீ அபிராமி பவுண்டேசன் கட்டுமான நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *