ரிலீஸ் ஆன பத்தே நாளில் ஜெயிலர் மற்றும் லியோ பட லைஃப் டைம் வசூல் சாதனையை துவம்சம் செய்த அனிமல்
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் லியோ மற்றும் ஜெயிலர் பட வசூல் சாதனையை முறியடித்து உள்ளது.
முன்னணி நடிகர்களின் படங்கள் என்றாலே பாக்ஸ் ஆபிஸ் மோதல் நிச்சயம் இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியது இந்தி படங்கள் தான்.
இந்த வருடம் ரிலீஸ் ஆன பான் இந்தியா படங்களில் அதிக வசூலை குவித்து முதல் இரண்டு இடங்களை தட்டிச் சென்றது ஷாருக்கான் படங்கள் தான்.
அவர் நடிப்பில் வெளிவந்த ஜவான் மற்றும் பதான் ஆகிய திரைப்படங்கள் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.
இதற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படமும், நான்காவது இடத்தில் லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் வெளியான லியோ திரைப்படமும் இடம்பெற்று இருந்தது.
இதில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடி வசூலை வாரிக்குவித்து இருந்தது. இதற்கு அடுத்த இடத்தில் உள்ள தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் ரூ.620 கோடி வசூலை வாரிக்குவித்து இருந்தது.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் 1-ந் தேதி திரைக்கு வந்த பான் இந்தியா படமான அனிமல் ரிலீஸ் ஆன பத்தே நாளில் ஜெயிலர் மற்றும் லியோ பட வசூல் சாதனையை முறியடித்து உள்ளது. இப்படம் 10 நாட்களில் ரூ.700 கோடி வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்துள்ளதோடு, பாக்ஸ் ஆபிஸில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இப்படத்தின் அடுத்த டார்கெட் ரூ.1000 கோடி தான். அதை எட்டிப்பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.