200 கோடி மோசடி வழக்கு – பாலிவுட் நடிகை ஜெக்கலின் மனு ஒத்திaவைப்பு

200 கோடி மோசடி வழக்கு – பாலிவுட் நடிகை ஜெக்கலின் மனு ஒத்திaவைப்பு
  • PublishedJanuary 31, 2024

200 கோடி ரூபா மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜெக்கலின் பெர்னாண்டஸ் அளித்த மனு மீதான விசாரணையை ஏப்.15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

200 கோடி ரூபா மிரட்டிப் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாலிவுட் நடிகை ஜெக்கலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். போர்ட்டீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிறுவனர் சிவிந்தர் மோகன் சிங் மனைவியை மிரட்டி 200 கோடி பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஜெக்கலின் பெயர் இடம்பெற்றது.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார் என்று தெரிந்தும், தொடர்ந்து அவருடன் பணபரிவர்த்தனை வைத்துக் கொண்டதாக அமலாக்கப் பிரிவு ஜெக்கலின் மீது குற்றம்சாட்டப்படது. அதோடு சுகேஷிடமிருந்து 10 கோடி மதிப்புள்ள பரிசுப்பொருள்களை பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இவ்வழக்கில் ஜெக்கலின் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி இடைக்கால ஜாமீன் பெற்றார். ஆனால் நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜெக்கலின் பெர்னாண்டஸ் ஜாமீன் பெற்றார்.

திரைப்பட நடிகையாக இருப்பதால், ஜெக்கலின் பெர்னாண்டஸ் அடிக்கடி வெளிநாடு செல்ல நேரிடும் என்று நீதிமன்றத்தில் ஜாக்குலின் தரப்பு கூறியது.

இதனைத் தொடர்ந்து ஜெக்கலின் நீதிமன்ற நிபந்தனைகளை தவறாக பயன்படுத்தவில்லை என்ற அடிப்படையில் ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன. அந்த வகையில், ஜெக்கலின் பெர்னாண்டஸ் அவர் செல்லும் நாடுகள், அவர் தங்கியிருக்கும் இடம், தொடர்பு எண்கள் போன்ற பிற விவரங்கள் உட்பட அவரது பயணத்தின் விரிவான விவரங்களை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, பணமோசடி வழக்கில் தன் மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என நடிகை ஜெக்கலின் பெர்னாண்டஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்திருந்தார்.

பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை தன் மீது ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக அவர் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

விசாரணையின்போது அமலாக்கத்துறை தரப்பில் “நடிகை ஜெக்கலின் பெர்னாண்டஸ் கோரிக்கையை ஏற்க முடியாது. அவர் சுகேஷ் சந்திரசேகர் மோசடி செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பதை தெரிந்தே சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான பொருட்களை தன் வசம் வைத்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் உள்ளன. சந்திரசேகர் மோசடி செயல்களில் ஈடுபட்டது தெரிந்திருந்தும் நடிகை ஜெக்கலின், தொடர்ந்து அவர் வழங்கிய பொருட்களை வாங்கி பயன்படுத்தியுள்ளார்” என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஏப்.15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *