இயக்குநர்கள் சங்கத் தலைவரானார் ஆர்.வி.உதயகுமார்

இயக்குநர்கள் சங்கத் தலைவரானார் ஆர்.வி.உதயகுமார்
  • PublishedMarch 5, 2024

பழைய நிர்வாகிகளை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வராததால், செயலாளராக இருந்த ஆர்.வி.உதயகுமாரை தலைவராகவும், பொருளாளராக இருந்த பேரரசுவை செயலாளராகவும், பொருளாளர் பதவிக்கு இயக்குநர் சரணை புதிதாகவும் போட்டியின்றி தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய, வரும் 16 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கான நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டனர். இதில், ஆர்.கே.செல்வமணி தலைமையிலான அணி வெற்றி பெற்றது. ஆர்.கே.செல்வமணி சங்கத்தின் தலைவர் பதவிக்கும், ஆர்.வி.உதயகுமார் செயலாளர் பதவிக்கும், பேரரசு பொருளாளர் பதவிக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த வருடம் நடந்த பொதுக்குழுவின் போது, ஏற்கனவே இருக்கும் நிர்வாகிகள் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கப்படவில்லை. இதனால், அதே நிர்வாகிகள் மறுபடியும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என்ற நிலை இருந்தது.

இந்நிலையில், தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என்று ஆர்.கே.செல்வமணி அறிவித்தார். இதனால், தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி எழுந்தது.

பழைய நிர்வாகிகளை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வராததால், செயலாளராக இருந்த ஆர்.வி.உதயகுமாரை தலைவராகவும், பொருளாளராக இருந்த பேரரசுவை செயலாளராகவும், பொருளாளர் பதவிக்கு இயக்குநர் சரணை புதிதாகவும் போட்டியின்றி தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மீதியிருக்கும் துணைத்தலைவர், துணைச்செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளுக்கு மட்டும் வரும் 16 ம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது.

சுமார் 2600 உறுப்பினர்களைக் கொண்ட இயக்குநர்கள் சங்கத்தில் இரண்டாயிரம் பேர் வாக்களிக்கும் உரிமைப் பெற்றவர்கள். இவர்களில் உதவி இயக்குநர்களும் அடக்கம். படம் இயக்கியவர்கள் மட்டுமே தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்குப் போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *