100 கோடி மோசடி; பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்
பணமோசடி வழக்கு தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை இயக்குனரகம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரணவ் ஜூவல்லர்ஸ் என்ற நகைக் குழுமத்தில் நடைபெற்ற ரூ.100 கோடி மோசடியில் தொடர்பு இருப்பதாக பிரகாஷ் ராஜ் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
அமலாக்கத்துறை பிரணவ் ஜூவல்லர்ஸில் சோதனை நடத்தியதாகவும் அதன் மூலம் ரூ.23.70 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகளை கைப்பற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக பிரகாஷ் ராஜ் (58) இருந்துள்ளார்.
இந்நிலையில், அடுத்த வாரம் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் அலுலவகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு பிரகாஷ் ராஜுக்கு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் மற்றும் தென்னிந்தியத் திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ள பிரகாஷ் ராஜ், பாஜக மற்றும் பிரதமர் மோடியை வெளிப்படையாக விமர்சிப்பவர்.
தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவின் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கிறது.
தமிழ்நாடு காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆர்.இல் பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனம் தங்க முதலீட்டுத் திட்டம் என்ற போர்வையில் பொதுமக்களிடமிருந்து ரூ.100 கோடி வசூலித்தது ஏமாற்றியதாகக் கூறப்பட்டுள்ளது.