போண்டா மணி குடும்பத்திற்கு நிதி உதவி அளித்தார் விஜயகாந்த்
கே.பாக்யராஜ் நடித்த பவுனு பவுனுதான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் போண்டா மணி.
வடிவேலு, கவுண்டமணி, விவேக் உள்பட பல நடிகர்களுடன் சேர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் சுமார் 270 படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் போண்டா மணி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 2 மாதம் சிகிச்சை பெற்றார். 2 சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் பதிவு செய்துள்ளார்.
வறுமையில் இருந்த போண்டா மணிக்கு திரைப்பிரபலங்கள் பலர் உதவி செய்தனர்.
பல்லாவரம் பொழிச்சலூர் வாடகை வீட்டில் வசித்தபடி சிகிச்சை பெற்று வந்த போண்டா மணி நேற்றிரவு 11 மணிக்கு வீட்டில் திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போண்டாமணியின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் விஜயகாந்த் போண்டா மணி குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தார். அதாவது, விஜயகாந்த் சார்பில் மறைந்த நடிகர் போண்டா மணியின் மனைவியிடம் நடிகர் மீசை ராஜேந்திரன், சாரப்பாம்பு சுப்புராஜ் ஆகியோர் நிதி உதவி வழங்கி இறுதி அஞ்சலி செலுத்தினர்.